Published : 09 Apr 2015 04:20 PM
Last Updated : 09 Apr 2015 04:20 PM

நாகூர் ஹனீபாவுக்கு தலைவர்கள் புகழஞ்சலி

பிரபல பாடகர் நாகூர் ஹனீபா மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வைகோ ( மதிமுக பொதுச் செயலாளர்): ''பேரறிஞர் அண்ணா இயக்கத்தில் இளமைப் பருவத்தில் தன்னை ஒப்படைத்துக்கொண்ட நாகூர் ஹனீபா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அரும்பாடுபட்டார். இயற்கையின் அருட்கொடையாக ஹனீபாவுக்குக் கிடைத்த கம்பீரமும், காந்தமும் நிறைந்த கானக் குரலை, இறைப்பணிக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தினார்.

அழைக்கின்றார் அண்ணா என ஓங்கி ஒலித்த பாடல், கோடான கோடி தமிழர்களின் இதயங்களில் அண்ணாவைச் செதுக்கியது.ஓடி வருகிறான் உதயசூரியன் என்ற பாடல் கழகத்தின் அனைத்து மேடைகளிலும், மாநாடுகளிலும் ஒலித்து, கழகத்தை வளர்த்தது. இயக்கத்திற்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டார்.

2004-ல் நதிகள் இணைப்புக்காக நான் நடைபயணம் சென்றபோது நாகூரில் எனக்கு வரவேற்புக் கொடுத்து, அரபு நாட்டில் அவருக்கு வழங்கப்பட்ட வெண்பட்டு ஆடையை அணிவித்து மகிழ்ந்தார்.

இசை முரசு அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது கானக்குரலும், பாடல்களும் என்றைக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்; காலத்தை வென்று நிற்கும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

ராமதாஸ் ( பா.ம.க நிறுவனர்): ''நாகூர் ஹனீபா அற்புதமான மனிதர். என் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் வைத்திருந்தார். என்னுடன் பல்வேறு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். தமது 13 ஆவது வயதில் தொடங்கி 90-வது வயது வரை 77 ஆண்டுகள் இசைத் தொண்டு செய்த உன்னதமான கலைஞர் ஹனீபா.

இறைவனிடம் கையேந்துங்கள் என்ற ஹனீபாவின் பாடல் அனைத்து மதத்தினரையும் கவர்ந்த ஒன்றாகும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் இப்பாடல் ஒலிக்காத இடமே கிடையாது. அதேபோல், திமுகவுக்காக ஹனீபா பாடிய பிரச்சாரப் பாடல்கள் மற்ற கட்சியினரையும் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டவை. அந்த அளவுக்கு உண்மையாக காந்தக் குரலைக் கொண்டவர் நாகூர் ஹனீபா. தமிழை தமிழாக உச்சரித்த நாகூர் ஹனீபாவின் மறைவு தமிழ் இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான்'' என்று ராமதாஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): ''தமிழகத்தில் இஸ்லாமியரின் புனித ஸ்தலமான நாகூரில் பிறந்து, இறைவன் கொடுத்த குரல் வளத்தால் மாபெரும் பாடகரான நாகூர் ஹனீபா மறைவு செய்திகேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமது பதினோராவது வயதில் பாட துவங்கிய இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் சுமார் முப்பதாயிரம் பாடல்களை பாடியுள்ளார். மறைந்த கண்ணியமிகு காய்தே மில்லத் போன்ற பெரும் தலைவர்கள் இவரது ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹனீபா தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், வஃபு வாரிய தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர் '' என்று விஜயகாந்த் புகழஞ்சலியில் கூறியுள்ளார்.

இரா.முத்தரசன் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்): ''திராவிட முன்னேற்ற கழக கொள்கைகளை தனது பாடல்கள் மூலம் பரப்பி வந்தவரும். தமிழ்நாடு முன்னாள் மேலவை உறுப்பினறுமான நாகூர் ஹனீபா மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

நாகூர் ஹனீபா பகுத்தறிவு கொள்கைகளுக்காகவும் சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும் குரல் எழுப்பியவர். திமுகவின் அரசியல் கருத்துகளையும் பொதுவான நல்ல கருத்துகளையும் பாடலாக்கி, மெட்டமைத்து இசை இசைத்து பாடியதிறன் மிக்கவர். தனது பாடல், இசை திறனால் சிங்கப்பூர், மலேசியா என உலகத் தமிழர்களால் அறியப்பட்டவர். அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தமிழக கலை உலகத்திற்கும் பேரிழப்பாகும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x