நிறைவளிக்காத ஏமாற்றம் தரும் பட்ஜெட்: திருமாவளவன்
தமிழக பட்ஜெட் எவருக்கும் நிறைவளிக்காத ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாகவே இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில் மக்களுக்குப் பயன்தரும் எந்தவொரு புதிய அறிவிப்பும் இல்லை. பழைய திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட அளவுக்கே இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இது ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாக இருக்கிறது.
தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்கப்படும் முழுமையான பட்ஜெட் இது என்பதால் மக்கள் நலத் திட்டங்கள் புதிதாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படி எந்தவொரு அறிவிப்பும் இதில் இல்லை.
மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்துக்கான ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட அதே 5,300 கோடியே இந்த ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2014-2015ஆம் ஆண்டில் மேல்நிலைக் கல்வி மொத்த சேர்க்கையில், ஆதிதிராவிட மாணவ மாணவியர் சேர்க்கையின் பங்கு 21.83 சதவீதத்திலிருந்து 24.07 சதவீதமாகவும், பழங்குடியின மாணவ மாணவியர் சேர்க்கையின் பங்கு 1.01 சதவீதத்திலிருந்து 1.03 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது என இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருந்தாலும் அந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மிகக் குறைவான அளவிலேயே உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஒவ்வோர் ஆண்டும் ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பார்க்கும்போது அந்த விடுதிகளின் அவல நிலை தெரிய வருகிறது.
மத்திய அரசு வரி வருவாய்ப் பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கை ஒரு சதவீதம் அளவுக்குக் குறைத்திருப்பதாலும், பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டுத் திட்டத்தை ரத்துசெய்திருப்பதாலும், பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களைக் குறைத்திருப்பதாலும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
பாஜக ஆளாத மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை ஏற்கெனவே கண்டித்திருக்கிறோம். தமிழக முதலமைச்சர் இந்த பட்ஜெட் உரையில் அந்த துரோகச் செயலைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் இந்தத் துரோகத்தைக் கண்டிப்பதோடு அதைத் தடுத்து நிறுத்த அனைத்துக் கட்சிகளும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
விவசாயிகள், ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளிகள் எனப் பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கை எதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. நதிநீர் உரிமை குறித்தும், மீனவர் பிரச்சனைக்குத் தீர்வுகாண்பது பற்றியும், ஈழத் தமிழர் பிரச்சனை குறித்தும் உறுதியான அறிவிப்புகள் எதுவும் இல்லை.
ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் எந்தத் தரப்பினருக்கும் நிறைவளிக்காத ஏமாற்றம் தரும் பட்ஜெட்.'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
