சென்னை: “கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய தவெக தலைவர் விஜய் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார். தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள்,” என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “2026 தேர்தலுக்கு முன்பே திமுக “ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர்.
ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய தவெக தலைவர் விஜய் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார்.
தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.
36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும். புதிய அரசு. புதிய நம்பிக்கை” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. 108 இடங்களில் வென்ற அந்தக் கட்சி பெரும்பான்மைக்காக காத்திருந்தபோது முதலில் ஆதரவுக் கரம் நீட்டியது காங்கிரஸ். அக்கட்சியின் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு உள்பட விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவையும் பெற்று ஆட்சியைப் பிடித்தார் விஜய். ஆட்சி அமையும் முன்னரே, காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஊடகப் பேட்டிகளில் தொடர்ச்சியாகக் கூறி வந்தனர். இந்நிலையில், “59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள்,” என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தவெக இன்னும் அமைச்சரவைப் பட்டியலை வெளியிடவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் அந்தப் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரே ஆட்சியில் பங்கு என்ற பேச்சை எடுத்து திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல் என்று பேசவைத்தார் மாணிக்கம் தாகூர் என்பது நினைவுகூரத்தக்கது.