

புதுடெல்லி: அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கான NEET நுழைவுத் தேர்வு OMR முறைக்குப் பதிலாக கணினி வழித் தேர்வாக (CBT முறையில்) நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான NEET நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்தது. இதையடுத்து, மறு தேர்வு ஜூன் 21ல் நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “NEET-UG தேர்வுக்கான புதிய தேதியை NTA அறிவித்துள்ளது. இந்த மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும். மாணவர்களும் அவர்களின் எதிர்காலமுமே எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளின் மீது அரசாங்கம் எப்போதும் மிகுந்த அக்கறையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் இருந்து வருகிறது.
நீட் தேர்வு மே 3ம் தேதி நடத்தப்பட்டது. மே 7ம் தேதிக்குள் 'ஊகத் தாள்கள்' (guess papers) என்று கூறப்படுபவற்றில் இடம்பெற்றிருந்த சில கேள்விகள், இந்த ஆண்டின் கேள்வித்தாளிலும் இடம்பெற்றிருந்ததாக NTA-வின் குறைதீர்க்கும் அமைப்பு வாயிலாகப் புகார்கள் பெறப்பட்டன. உடனடியாக இது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. NTA மற்றும் அரசாங்கம் ஆகியவை உயர்கல்வித்துறையுடன் இணைந்து ஒரு முதற்கட்ட விசாரணையைத் தொடங்கின. பின்னர் இந்த விவகாரம் இந்திய அரசாங்கத்தின் தொடர்புடைய விசாரணை முகமைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலோட்டமாகப் பார்க்கையில் இவ்விவகாரம் இரண்டு அல்லது மூன்று மாநிலங்களுடன் தொடர்புடையதாகத் தோன்றியது. எனவே, அந்தந்த மாநிலங்களின் விசாரணை முகமைகளுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த விசாரணை செயல்முறை மே 7 அன்று இரவு முதல் முழுவீச்சில் தொடங்கியது. மே 8 முதல் தொடர்ந்து நடைபெற்றது. நான்கு நாட்களுக்குள், 'ஊகத் தாள்கள்' என்ற போர்வையில் கேள்விகள் கசிந்துள்ளன என்பது குறித்த தெளிவு எங்களுக்குக் கிடைத்ததும், அது உறுதியானதும், மாணவர்களின் நலன் கருதி மே 12 அன்று நாங்கள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டோம்.
கல்வித்துறையில் செயல்படும் மாஃபியா கும்பல்களின் சதியினாலோ அல்லது தகுதியற்ற ஒரு நபர் முறையற்ற வழிகள் மூலம் பயனடைவதாலோ தகுதியுள்ள எந்தவொரு மாணவரும் தங்கள் உரிமைகளை இழந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். தற்போது மறு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் விஷயத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்படும். தேர்வு மாஃபியாக்கள் மற்றும் சமூக விரோத சக்திகளுக்கு எதிரான ஒரு நீண்ட போராட்டமாக இது அமையும். இந்த தொழில்நுட்ப காலத்தில் புதிய சவால்கள் உருவாகி வருகின்றன. பல்வேறு சமூக ஊடகக் கணக்குகள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மறுதேர்வு நடைமுறையை சீர்குலைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக இந்த விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வசம் ப்படைத்தது. சிபிஐ மீதும் அதனுடன் இணைந்து பணியாற்றும் பிற முகமைகள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அரசும், அனைத்துத் துறைகளும் உயர்மட்டத் தலைமையும் இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக அணுகி வருகின்றன. அவர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு நிலைமையை மிக உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவோருக்கு உங்கள் வாயிலாக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். வரவிருக்கும் தேர்வு நடைமுறையில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
சமூகத்திடம் குறிப்பாக அனைத்து மாணவர்களிடமும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். எவ்வித அச்சமும் இன்றி நீங்கள் தேர்வு எழுத வர வேண்டும். அரசு எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக துணை நிற்கும். தகுதிவாய்ந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு மாஃபியா சதித்திட்டமோ அல்லது பண பலமோ உங்கள் கல்விக்கான இடத்தை அபகரித்துச் செல்வதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை என்பதை மீண்டும் வலியுத்திக் கூற விரும்புகிறேன். அதனால்தான் நாங்கள் இத்தகைய ஒரு கடுமையான முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. மாணவர்களின் நம்பிக்கைதான் எங்களுக்கு மிக மிக முக்கியம்.
சிபிஐ மிகச்சரியாகவே கூறியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட எவரும் தப்ப முடியாது. அவர் NTA அமைப்புக்குள் இருப்பவராக இருந்தாலும் சரி அல்லது அதற்கு வெளியே இருப்பவராக இருந்தாலும் சரி குற்றத்தில் ஈடுபட்ட எவரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. கணினி வழித் தேர்வு ஒப்பீட்டளவில் OMR முறையை விட சிறந்தது. இணையக் குற்றங்கள் என்பவை இன்று ஒரு மிகப்பெரிய தனி உலகமாகவே உருவெடுத்துள்ளன. இதில் சவால்கள் இருந்தாலும் நாம் நமது நாட்டின் அமைப்பின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நான் குறிப்பிட விரும்பிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அடுத்த ஆண்டில் இருந்து இப்பிரச்சினையின் மூல காரணமே களையப்படும். NEET தேர்வு, OMR முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கணினி வழித் தேர்வாக (CBT) நடத்தப்படும்” என தெரிவித்தார்.