

கல்விக் கடன் பெற்ற மாணவர்களை மக்கள் நீதிமன்றத்துக்கு வரவழைத்தது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் படிப்பை முடித்து ஓராண்டு கழிந்த பிறகே அவர்களிடம் அசலுக்கான தவணை, வட்டியை வசூலிக்க வேண்டும். அதுவரை கடனுக்கான வட்டியை அரசே செலுத்தும். ஆனால், வங்கிகளுக்கு மத்திய அரசு உரிய காலத்தில் வட்டி தொகையை செலுத்தாமல் இருப்பதால் கடன் கொடுத்த நாளிலிருந்தே வட்டி கணக்கிட்டு அதை மாணவர்களிடம் வங்கிகள் வசூலித்து வருகின்றன.
இப்படி, 2009-லிருந்து கல்விக் கடனுக்கு வட்டி கணக்கிட்டுள்ள வங்கிகள், சம்பந்தப்பட்ட மாணவர் கள் மீது மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மக்கள் நீதி மன்றத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். விசாரணை யின்போது, வட்டியில் குறிப்பிட்ட தொகையை கழித்துக் கொண்டு மீதி வட்டியையும் மொத்த அசலையும் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரே தவணையில் செலுத்திவிடுவதாக மாணவர்களிடம் எழுதி வாங்கப்படு கிறது.
வங்கிகளின் இந்த நடவடிக் கையை எதிர்த்து கல்விக் கடன் விழிப் புணர்வு இயக்கத்தின் அமைப்பாளர் நாமக்கல் ராஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தின் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் புகார் செய்திருக்கிறார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ராஜ்குமார் கூறியதாவது: 2010-லிருந்து 2014 வரை இந்தியா முழுவதும் 38,70,417 பேருக்கு ரூ.5,157 கோடிக்கு கல்விக் கடனுக்கான வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் 15,80,527 பேருக்கு ரூ.1530.47 கோடி வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலான மாணவர்களின் பெயர்கள் வாராக்கடன் கணக்கில் சேர்க்கப் பட்டு ‘சிபிலிலும்’(கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட்) பதிவு செய்யப்பட்டுள் ளன.
இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த மாணவர்கள் எந்த வங்கியி லும் எளிதில் கடன் பெறமுடியாத நிலையை வங்கிகள் ஏற்படுத்தி விட்டன. சம்பந்தப்பட்ட மாணவர் களுக்கே இது தெரியாது.
இந்நிலையில், தமிழகத்தில் இப்படி வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களை மக்கள் நீதிமன்றத் தில் நிறுத்தி கல்விக் கடனை கந்துவட்டிக்காரர்கள்போல் வசூலித் துக் கொண்டிருக்கின்றன வங்கிகள். நான் கொடுத்த புகார் தொடர்பாக மார்ச் 13-ல் என்னை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லியிருக்கிறது நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு.
நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட 25 மாணவர்களின் பட்டியலை தகுந்த ஆதாரங்களுடன் சேகரித்து வைத்திருக்கிறேன்.
அதை விசாரணையின்போது தெரிவிப்பேன். விசாரணை முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.