

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான இணைப்புகளுக்கு நவீன டிஜிட்டல் மீட்டர்களை பொருத்தியதால், மின்வாரியத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மின் பயன்பாட்டு அளவை கணக்கிட, ‘எலக்ட்ரோ மெக்கானிக்கல்’ மீட்டர்கள் பயன் பட்டு வந்தன.
இந்நிலையில் மின் பயன் பாட்டு அளவை துல்லியமாக கணக்கிட, கடந்த சில ஆண்டு களுக்கு முன், மின்னணு மீட்டர்கள் (டிஜிட்டல் அல்லது ஸ்டேட்டிக்) அறிமுகம் செய்யப்பட்டன.
இது குறித்து தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் விவசாயம், குடிசை வீட்டு இணைப்புகளைத் தவிர்த்து இதர 2.3 கோடி இணைப்புகள் மீட்டர் வசதியைப் பெற்றுள்ளன. அவற்றில், தற்போது 1.1 கோடி இணைப்புகளுக்கு புதிய வகை மீ்ட்டர்களை பொருத்தி முடித்துள்ளோம்.
புதிய இணைப்பு பெறுவோ ருக்கும், பழைய மீட்டரில் கோளாறு ஏற்பட்டாலும் டிஜிட்டல் மீட்டர்கள் தான் பொருத்தப்படுகின்றன. மீதமுள்ள நுகர்வோருக்கும் புதிய மீட்டர்களை இந்த ஆண்டுக்குள் பொருத்திவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நுகர்வோர் கருத்து
புதிய மீட்டர்களைப் பொருத் திய பிறகு பல வீடுகளில் மின் பயன்பாட்டு அளவு முந்தைய மாதங்களை விட அதிகரித்திருப் பதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
அதேநேரத்தில், முன்பைக் காட்டிலும் மின் நுகர்வு குறைந் திருப்பதாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.
வருவாய் அதிகரிப்பு
மின் நுகர்வோரின் கருத்து களைப் பற்றி மின்வாரியத்தினர் கூறியதாவது:
பழைய மெக்கானிக்கல் மீட்டர் களில் துல்லியமாக மின் நுகர்வை அறிய முடியாது. செல்போன் சார்ஜ் செய்யப்படும்போது அது பதிவாகாமல் போகும். ஆனால், புதிய மீட்டர்கள் அதைக் கூட துல்லியமாகப் பதிவு செய்யும். அதனால் பல வீடுகளில் மின் பயன்பாடு சற்று அதிகரித்திருக்கும். அதேநேரத்தில், வெகு சிலர், புதிய மீட்டர் பொருத்திய பிறகு, கட்டணம் குறைந்திருப்பதாகக் கூறு கின்றனர். அதற்கு, முன்பு பொருத் தப்பட்டிருந்த மெக்கானிக்கல் மீட்டர் பழுதானதாக இருந்து, தவ றான ரீடிங்கை காட்டியிருக்கலாம். அதனால், புதிய மீட்டரை மாற்றிய பிறகு, கட்டணம் சற்று குறைந் திருக்கும்.
ஒவ்வொரு இணைப்புக்கும் ஒரு சில யூனிட்கள் அதிகம் பதிவாகத் தொடங்கியிருந்தாலும் கூட, மொத் தத்தில் புதிய மீட்டர்களால் சில கோடி ரூபாயாவது வருவாய் அதிகரித்திருக்கும். இதைக் கடந்த 3 ஆண்டுகளாக படிப்படியாக செய்து வருவதால், புதிய மீட்டர்களால் எவ்வளவு வருவாய் கூடியிருக்கிறது என்பதைக் கூறுவது சிரமம்.
20 சதவீதம் உயர்வு
கடந்த ஆண்டு (2014) இதே காலகட்டத்தில் இருந்ததைக் காட்டிலும் மின்வாரியத்தின் மின் கட்டண வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் 15 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது, புதிய இணைப்புகள் வந்திருப்பது, மின் இழப்பை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்டது போன்ற காரணங்களால் சுமார் 5 சதவீதம் அளவுக்கு வருவாய் கூடியிருக்கிறது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.