

ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 60 நாட்களில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்கும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
அதன் பின்னர், அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' இன்று வரை 11 இலட்சத்து 6 ஆயிரத்து 453 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 738 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதிய ரேஷன் கார்டு கேட்டு முறையான ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்பவர்கள் அனைவருக்கும் 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். இதுகுறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு மீதான குறைகள் முகாம்கள் மூலம் உடனடியாக தீர்க்கப்படும்'' என்று காமராஜ் தெரிவித்தார்.