காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் மனைவியுடன் கமிஷனர் அலுவலகத்தில் மனு: உயிருக்கு ஆபத்து என புகார்

காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் மனைவியுடன் கமிஷனர் அலுவலகத்தில் மனு: உயிருக்கு ஆபத்து என புகார்
Updated on
1 min read

காதல் திருமணம் செய்து கொண்ட போலீஸ்காரர், பாதுகாப்பு கேட்டு மனைவியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் மனு கொடுத்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சஞ்சீவிநாதபுரத்தை சேர்ந்த வர் ஆறுமுகம். இவரது மகன் சுப்பிர மணியன் (26). தமிழக காவல்துறையில் சென்னை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். ராஜபாளையம் தாலுகா கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். பள்ளி ஆசிரியர். இவரது மகள் அபிநயா (23). எம்.எஸ்சி., பி.எட் படித்துள்ளார். சுப்பிரமணியனும், அபிநயாவும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 10-ம் தேதி சென்னை மண்ணடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து நேற்று மனு கொடுத்தனர்.

இதுதொடர்பாக அபிநயா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் இருவரும் 10 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்தோம். ஆனால் சாதியை காரணம் காட்டி என்னுடைய வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். என்னுடைய சம்மதம் இல்லாமல், என் வீட்டில் எனக்கு வேறு ஒரு இடத்தில் திருமண ஏற்பாடு செய்தனர். அதனால் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். சாதியை காரணம் காட்டி, எங்களை பிரிக்க என்னுடைய பெற்றோர் பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். மற்ற ஆட்களிடம் என்னுடைய புகைப்படத்தை கொடுத்து தேடி வருகின்றனர். எனது கணவரை வேலையை விட்டு நீக்கும் முயற்சியை செய்கின்றனர்.

எங்கள் இருவரின் உயிரிக்கு பாதுகாப்பு இல்லாததால் வீட்டுக்குள் ளேயே அடைந்துள்ளோம். எனக்கும், எனது கணவருக்கும் மற்றும் அவரது குடும்பத்துக்கும் எவ்விதமான பாது காப்பும் இல்லை. அதனால் தயவு செய்து பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்கோ, எனது கணவருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டால், அதற்கு காரணம் என் குடும்பத்தினரே என உறுதியுடனும் முழுமனதுடனும் கூறிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in