

பிரதிநிதித்துவப்படம்
சென்னை: ஊராட்சிச் சாலைகள் மேம்பாட்டுப் பிரிவின் கீழ், ரூ.1,037.70 கோடி மதிப்பீட்டில் 797.13 கி.மீ. நீளமுள்ள 340 கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை மாவட்டச் சாலைகள் தரத்துக்கு உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவையில், 2026–27-ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கையின்போது, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், கிராமப்புற போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்தார்.
பள்ளிகள், மருத்துவ நிலையங்கள், சந்தைகள் மற்றும் அத்தியாவசியச் சேவைகளை கிராமப்புற மக்கள் எளிதாக அணுகும் வகையில், ஆண்டுதோறும் ரூ.2,550 கோடி மதிப்பீட்டில் 2,000 கி.மீ. நீளமுள்ள கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
போக்குவரத்து அளவின் அடிப்படையில், ஆண்டுதோறும் 1,000 கி.மீ. நீளமுள்ள ஒற்றை வழித்தட இதர மாவட்டச் சாலைகள் ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் இடைநிலை வழித்தடமாக அகலப்படுத்தப்படும்.
மேலும், 1,000 கி.மீ. நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் ரூ.1,250 கோடி மதிப்பீட்டில் இதர மாவட்டச் சாலைகள் தரத்திற்கு உயர்த்தப்படும்.
இத்திட்டத்தின் ஊராட்சிச் சாலைகள் மேம்பாட்டுப் பிரிவின்கீழ், ரூ.1,037.70 கோடி மதிப்பீட்டில் 797.13 கி.மீ. நீளமுள்ள 340 கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை இதர மாவட்டச் சாலைகள் தரத்துக்கு உயர்த்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மண்டலத்தில் 226.83 கி.மீ. நீளமுள்ள 103 சாலைகள் ரூ.316.41 கோடியிலும், கோயம்புத்தூர் மண்டலத்தில் 326.21 கி.மீ. நீளமுள்ள 131 சாலைகள் ரூ.410.77 கோடியிலும், மதுரை மண்டலத்தில் 66.66 கி.மீ. நீளமுள்ள 29 சாலைகள் ரூ.88.28 கோடியிலும், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் 177.43 கி.மீ. நீளமுள்ள 77 சாலைகள் ரூ.222.24 கோடியிலும் தரம் உயர்த்தப்படவுள்ளன.
சாலைகளின் நிலை, உள்ளூர்த் தேவைகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இச்சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.