

கோப்புப் படம்
காஞ்சிபுரம்: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடக் கோரி கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 34 மேற்பார்வையாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றதாக 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் தங்களுக்குப் பணிச்சுமையும் கூடுதல் செலவினங்களும் ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது, திரும்பப் பெறும் பாட்டில்களைக் கையாள ஆட்களை நியமிப்பது மற்றும் அவற்றைச் சேமித்து வைக்க தனி இடத்தை வாடகைக்கு எடுப்பது போன்றவற்றுக்கான செலவுகளைத் தாங்களே ஏற்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இத்திட்டத்தை கைவிடக் கோரி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அடைத்து ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக மண்டல மேலாளர் அலுவலகம் எதிரே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ஆனாலும் வேறு வழியின்று நேற்றிரவு ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர்.
இந்நிலையில், அனுமதியின்றி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், நிர்வாக ரீதியான ஒழுங்கு நடவடிக்கையாக 34 மேற்பார்வையாளர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அடுத்தகட்டமாக விற்பனையாளர்கள் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது அடுத்தடுத்து எடுக்கப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கை, ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.