Published : 01 Apr 2014 07:44 AM
Last Updated : 01 Apr 2014 07:44 AM

காங்கிரஸுடன் முன்பே பேசாதது நான் செய்த மிகப்பெரிய தவறு!- நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் பேட்டி

“இந்தத் தேர்தலில் நாங்கள் தீர்மானிக்கிற சக்தியாக இருப்போம்’’ - கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நவரச நாயகன் கார்த்திக் ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இப்போது, கார்த்திக் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக மதுரை தொகுதியில் களமிறங்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக ’தி இந்து’வுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி:

வெற்றிக் கூட்டணி அமைத்து சாதிக்கப் போவதுபோல் முந்தைய பேட்டியில் கூறி இருந்தீர்களே.. அந்த முயற்சி என்னானது?

எங்களோடு இரண்டு கட்சிகள் கூட்டணி பேச்சு நடத்தினர். இன் னொரு கட்சியிலருந்து, ‘நீங்க மொதல்ல எங்க ஆபீஸுக்கு வாங்க.. மத்தத அப்புறம் பேசிக் கலாம்’னு சொன்னாங்க. அப்புறம் ‘தலைமையில கேட்டுச் சொல் றோம்’னு இழுஇழுன்னு இழுத் தாங்க. நாங்க வேற எங்கேயும் போகாம இருக்கத்தான் இழுத் தடிக்கிறாங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. அதுக்கப்புறம் அவங் களோட பேசுறத நிறுத்திட்டோம்.

உங்களை காங்கிரஸ் பக்கம் கொண்டுபோய் சேர்த்தது யார்?

யாரும் எங்களை கொண்டு போய் சேர்க்கவில்லை. டெல்லியிலிருந்து அகமது படேலிடமிருந்து அழைப்பு வந்தது. காங்கிரஸ் தலைவர்கள் என் மீது இவ்வளவு மரியாதை வைச்சிருப்பாங்கன்னு முன்கூட்டியே தெரியாமல் போயிருச்சு.

129 வருட பாரம்பரியம் கொண் டது காங்கிரஸ் கட்சி. டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் நம்மைப் பற்றி முழுமையாக ரிசர்ச் பண்ணி வைச்சிருக்காங்க. எங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியாததுக்கு அவர்கள் சொன்ன காரணங்கள் நியாயமானது. ஞாயிற்றுக் கிழமை காலை எனது வீட்டுக்கு ஞானதேசிகன் வந்தார். முக்கால் மணி நேரம் பேசினார். காங்கிரஸ் கட்சியுடன் முன்கூட்டியே நான் பேச்சுவார்த்தை நடத்தாதது நான் செய்த மிகப் பெரிய தவறு என்பதை இப்போது உணர்கிறேன். இதுவும் எங்களுக்கு ஒரு பாடம்.

காங்கிரஸ் மீது ஊழல் முத்திரை குத்தப்பட்டு அது தனிமைப் படுத்தப்பட்டுக் கிடக்கும்போது நீங்கள் காங்கிரஸுக்கு கை கொடுக்கின்றீர்களே..?

காங்கிரஸுகிட்ட இருக்கும் பக்குவமும் மரியாதையும் வேறு கட்சிகளில் இல்லை. காங்கிரஸில் ஒருசில பேர் தப்புப் பண்ணி இருக்கலாம். காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகள் ஆண்ட கட்சி. மாநிலத்தில் சில கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்துகின்றன. இந்தக் கட்சிகள் மீது எல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லையா?

காங்கிரஸ் கட்சியைப் பற்றிய உங்களது மதிப்பீடுதான் என்ன?

காங்கிரஸ் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு நிறைய உழைத்திருக்கிறது; நிறைய தியாகங்களை செய்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் எதிரிக் கட்சிகளாய் செயல்பட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கிவிட்டன. இல்லாவிட்டால் இன்னும் பல நல்ல திட்டங்களை காங்கிரஸ் தந்திருக்கும். காங்கிரஸ் தலைவர்களிடம் நிஜம் இருக்கு; எதார்த்தம் இருக்கு. இதை நான் இந்த இடத்தில் சொல்லியே ஆகணும். கடந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்துவிட்டு நான் பட்டபாடு எனக்குதான் தெரியும்.

காங்கிரஸ் கூட்டணியில் உங்களுக்கு மதுரை தொகுதி ஒதுக்கி இருப்பது உண்மைதானா?

கன்ஃபார்ம் ஆன பின்னாடி சொல்லலாம்னு இருந்தேன். ஞாயிற்றுக்கிழமை இரவுதான் டெல்லியிலிருந்து போன் செய்து ’மதுரை தொகுதி உங்களுக்கு ஒதுக்கி இருக்கு. வாழ்த்துகள்; ஜெயிச்சுட்டு வாங்க’ன்னு சொன்னாங்க. இருந்தாலும் தமிழக காங்கிரஸ் தரப்பிலிருந்து முறைப் படி அறிவிக்கட்டும்னு காத் திருக்கிறேன். எங்களுக்கு மதுரை தொகுதி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், நல்ல மனிதர்களுடைய நட்பு கிடைத் ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறோம். நினைத்ததை அடைவதற்காக கூட்டணி அமைத்துவிட்டு இலக்கை அடைந் ததும் கூட்டணிச் சக்கரத்தை கழற்றி விடுவது என்ன சார் கூட்டணி?

இவ்வளவு அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் உங்களது செயல் பாடுகள் பல நேரங்களில் நகைப் புக்கு உள்ளாகி விடுகின்றனவே.. குறித்த நிகழ்ச்சிக்கு வருவதில்லை, செல்போனில் பிரஸ் மீட் இப்படி உங்களை காமெடியனாகவே மீடியாக்கள் சித்தரிக்கின்றனவே..?

அது என்னுடைய தவறு இல்லை. சில இடங்களில் என் னைக் கேட்காமலேயே நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்து வசூல் வேட்டை நடத்துகின்றனர். அங்கு நான் எப்படிப் போகமுடியும். இன்னும் சிலர் ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு கூப்பிடுகின்றனர். பல இடங்களிலும் காட்சி கொடுக்க நான் என்ன கிருஷ்ண பரமாத்மாவா? டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில் செல் போனில் பிரஸ் மீட் நடத்துவது குற்றமா? 2011 தேர்தலுக்கு நான் ஒரு தேர்தல் அறிக்கை தயாரித்து முக்கிய அதிகாரிகளுக்கு கருத்துக் கேட்டு அனுப்பினேன். அதிலிருந்த சில விஷயங்களை முக்கிய அரசியல் கட்சிகள் காப்பியடித்து தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்த்துவிட்டனர். இதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இதை எல்லாம் சொன்னால் கார்த்திக்கை காமெடியன் என்கிறார்கள்.

2011 தேர்தலுக்கு நான் ஒரு தேர்தல் அறிக்கை தயாரித்து முக்கிய அதிகாரிகளுக்கு அனுப்பினேன். அதை முக்கிய அரசியல் கட்சிகள் காப்பியடித்து தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்த்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x