

திமுக செயற்குழுக்கூட்டம் மார்ச் 5-ம் தேதி நடக்கவுள்ளது. இந்தக்கூட்டத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பிப்பது, கட்சியின் அணிகளை பலப்படுத்துவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
திமுக உட்கட்சி தேர்தல் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, திமுகவில் உள்ள பல்வேறு அணிகளுக்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இந்த புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் செயற்குழுக் கூட்டம் ரங்கம் இடைத்தேர்தலால் தள்ளிப்போனது. இடைத்தேர்தல் முடிந்த நிலையில், திமுக செயற்குழுக் கூட்டம் மார்ச் 5-ம் தேதி நடக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
ரங்கம் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு நடக்கும் இந்த செயற்குழுக் கூட்டத்தில், 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
திமுக செயற்குழுக் கூட்டம் மார்ச் 5-ல் நடக்கிறது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் திமுக தலைமைக் கழகத்தில் ஆரம்பித்து பல்வேறு அணிகளின் கீழ் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் அறிமுகம் செய்து கொள்ளும் நிகழ்வு நடக்கும்.
இதையடுத்து 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுகவை தயார்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்படும்.
உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி அளவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செயற்குழுவில் அறிவுரைகள் வழங்கப்படும்.
மேலும் திமுகவில் உள்ள ஒவ்வொரு அணிகளின் சார்பாக தமிழகம் முழுவதும் மாநாடுகள் நடத்துவதற்கு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இந்த மாநாடுகளின் மூலம் அந்தந்த அணிகளின் கீழ் அதிகளவிலான உறுப்பினர்களை சேர்த்து கட்சியை பலப்படுத்த வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.