ஸ்ரீங்கம் இடைத்தேர்தல்: விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட கொடிகள், பேனர்கள் அகற்றம்
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் ஃபிளக்ஸ் போர்டுகள் கொடிகள், தோரணங் கள் நேற்று அகற்றப்பட்டன.
வரும்13-ம் தேதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி தொகுதி முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக விதிகளை மீறி கொடிகள், தோரணங்கள், பேனர்கள் கட்டப் பட்டிருப்பது குறித்து செய்திகள் வெளியானபோதிலும், தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று திடீரென ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, சாலை ரோடு, திருவானைக்கா, வீரேஸ்வரம், ஜீயபுரம், பெரியார் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் தோரணங்கள், கொடிகள் மற்றும் ஃபிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.
ஸ்ரீரங்கம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.காதர் மைதீன், காவல் உதவி ஆணையர் கபிலன், மாநகராட்சி நகரப் பொறியாளர் சந்திரன், காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி, மோதல் சம்பவங்கள் நடை பெறாமல் இருப்பதற்காக ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர்.
