

பிரதமர் நரேந்திர மோடி ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ திட்டத்தை அறிவித்து 6 மாதங்களாகியும் இன்னும் 130 எம்.பி.க்கள் தங்களுக்கான கிராமத்தையே தத்தெடுக்காமல் உள்ளனர்.
சுகாதாரம், சுத்தம், பசுமை பரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை வசதிகளை கொண்ட மாதிரி கிராமங்களை உருவாக்குவதற்காக ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ என்ற கிராம தத்தெடுப்பு திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன்படி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் பெண்கள், முதியோர், குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
இப்படி ஒவ்வொரு எம்.பி.யும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரு கிராமத்தையும் 2019 மார்ச்சுக்குள் மேலும் 2 கிராமங்களையும் 2024 மார்ச்சுக்குள் மேலும் 5 கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும் என்பது பிரதமரின் திட்ட இலக்கு.
தத்தெடுக்கும் கிராமங்கள், சம்பந்தப்பட்ட எம்.பி. அல்லது அவரது மனைவியின் சொந்த ஊராக இருக்கக் கூடாது. மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குள்ளும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தாங்கள் தேர்வு செய்யப்பட்ட மாநிலத்துக்குள்ளும் நியமன உறுப்பினர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் கிராமங்களை தேர்வு செய்யலாம். நகர்ப்புற எம்.பி.க்கள் அருகிலுள்ள ஊரக தொகுதிக்குட்பட்ட கிராமங்களை தேர்வு செய்யலாம்.
இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.பி.க்கள் நிதி ஒதுக்கலாம். மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகமும் திட்டங்களுக்கு துணை நிற்கும்.
இத்திட்டத்தின்படி, முதல் கிராமத்தை ஒரு மாத காலத்துக்குள் எம்.பி.க்கள் தேர்வு செய்து அங்கே 3 மாதங்களுக்குள் முதல்கட்ட செயல்பாடுகளை தொடங்க வேண்டும். ஆனால், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் சேர்த்து மொத்தமுள்ள 789 எம்.பி.க்களில் 659 பேர் மட்டுமே கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். எஞ்சிய 130 பேர் 6 மாதங்களாகியும் இன்னும் கிராமங்களை தேர்வு செய்யவில்லை.
குஜராத், ஹரியாணா, கேரளம், அசாம், இமாச்சல பிரதேசம், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் தங்களுக்கான கிராமங்களை தேர்வு செய்து பணிகளை தொடங்கிவிட்டனர். தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவை உறுப்பினர்கள் 39 பேரும் கிராமங்களைத் தேர்வு செய்துவிட்டனர். மாநிலங்களவை உறுப்பினர்கள் 17 பேரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவைத் தவிர மற்ற அனைவரும் கிராமங்களை தேர்வு செய்துவிட்டதாக மத்திய அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் 42 பேரில் மூவர் மட்டுமே கிராமங்களை தேர்வு செய்துள்ளனர். அங்குள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவர்கூட தங்களுக்கான கிராமத்தை இதுவரை தேர்வு செய்யவில்லை. கிராமங்களை தேர்வு செய்யாதவர்கள் பட்டியலில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சீதாராம் யெச்சூரியின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.