ஆள்மாறாட்டம், போலி ஆவணப் பதிவை தடுக்க அரசாணைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்: பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
ஆள்மாறாட்டப் பதிவு மற்றும் போலி ஆவணப்பதிவை தடுப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் உத்தவிட்டுள்ளார்.
பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நேற்று நடந்தது. இதில், முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், பதிவுத்துறை தலைவர் சு.முருகையா மற்றும் பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை), மாவட்ட பதிவாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:
பதிவுத்துறையில் 2014-15-ம் ஆண்டுக்கு வருமான இலக்காக ரூ.10,470 கோடி நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுவரை ரூ.7,276 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இலக்கை அடைய பதிவுத் துறையின் அனைத்து அலுவலர் களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சார் பதிவாளர் அலுவல கங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டிடம் கட்டித்தர அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, சொந்தக் கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 67 அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டிடம் கட்ட வேண்டியுள்ளது.
ஆள்மாறாட்டப் பதிவு மற்றும் போலி ஆவணப் பதிவை தடுக்கும் நோக்கில் போடப்பட்ட அரசாணைகளை பதிவு அதிகாரிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும். முன் ஆவணங்கள், வருவாய் ஆவணங்கள், சமீபத்திய வில்லங்கச் சான்றுகள் ஆகியவற்றை பரிசோதித்து பொதுமக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஆவணப்பதிவை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு குறைகள் இல்லாத நிறைவான சேவைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்தத் தகவல்கள் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
