

தஞ்சாவூர்: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 31 ஏக்கர் அரசு நிலத்தை உயர் நீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த் துறையினர் நேற்று மீட்டு, அறிவிப்புப் பலகையை வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்டிருந்த 31 ஏக்கர் புஞ்சை தரிசு நிலத்தை, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்து, அந்த நிலத்தில் பெரிய அளவில் கட்டிடங்கள் கட்டி, வகுப்புகளை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை வருவாய்த் துறை மீட்க வேண்டும் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து, கோட்டாட்சியர் நித்யா, வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று அங்கு சென்று, ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலத்தை வருவாய் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், “இது அரசு நிலம், அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற அறிவிப்பு பலகையை வைத்தனர்.
பின்னர், மீட்கப்பட்ட நிலத்தை சிறைத் துறை அதிகாரிகளிடம், கோட்டாட்சியர் ஒப்படைத்தார். தொடர்ந்து, சிறைத் துறை அதிகாரிகள் அந்த இடத்தில் திறந்தவெளி சிறை அமைப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை நேற்று மாலை அங்கு நடத்தினர்.