சுதந்திர தின அணிவகுப்பில் மயக்கமடைந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்

முதல்வர் விஜய் அறிவிப்பு
தர்மராஜ்

தர்மராஜ்

Updated on
1 min read

சென்னை: சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்று மயக்கமடைந்து உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

80-வது சுதந்திர தின விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில், புனித ஜார்ஜ்கோட்டை கொத்தளத்தில் 119 அடி உயர கொடிக்கம்பத்தில்முதல்வர் விஜய் முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.

மேலும், காவல்துறையின் இசைக் குழுவினரும் வாத்தியங்களை இசைத்து விழாவை உற்சாகப்படுத்தினர். அப்போது, காவல் இசைக் குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் ஏ.தர்மராஜ் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் ஏ.தர்மராஜ் (56), நேற்று முன்தினம் (15-ம் தேதி) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது திடீரென மயங்கி விழுந்து சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயரமான செய்தியைஅறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

முதல்நிலைக் காவலர் தர்மராஜின் உயிரிழப்பு தமிழக காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தர்மராஜை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணநிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் விஜய் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த காவலர் தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல், நெந்தட்டி ஐயனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர். இவருக்கு ராணி மங்கலவள்ளி (53) என்ற மனைவியும், அனவர்த்த பெருமாள் (22) என்ற மகனும், சுப்புலட்சுமி (20) என்ற மகளும் உள்ளனர்.

<div class="paragraphs"><p>தர்மராஜ்</p></div>
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: வனத்துறையினர் மீது கொலை வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in