கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: வனத்துறையினர் மீது கொலை வழக்கு

இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம்
கர்நாடக மாநிலம் ஹனூரில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கர்நாடக மாநிலம் ஹனூரில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated on
2 min read

பெங்களூரு: கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறையினர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில் காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்குட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் மானை வேட்டையாடியதாக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். காயமடைந்த‌ மகிமை தாஸ் (48) மைசூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மரியமங்கலம், தோமையார் பாளையம், ஹனூர், கொள்ளேகால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் அங்குள்ள‌ வனத்துறை அலுவலகங்களை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த பொருட்கள், வாகனங்களை சேதப்படுத்தினர்.மேலும் மைசூரு, மேட்டூர், சத்தியமங்கலம், மாதேஸ்வரன் மலை ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக நேற்று காலையில் ஹனூர், கொள்ளேகால் ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மைசூரு, சாம்ராஜ் நகர் ஆகிய இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ஹனூர் அம்பேத்கர் சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், விவசாய சங்கத்தினர், கிறிஸ்துவ அருட்தந்தையர்கள் உட்பட‌ 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஹனூர் காவல் நிலையத்தை நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முற்றுகையிட்டு வனத்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை: உயிரிழந்தவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த மைசூரு கே.ஆர்.மருத்துவமனை வாசலிலும், அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை செய்ய மறுத்தும், உடல்களை வாங்க மறுத்தும் வழக்கறிஞர்களுடன் முழக்கம் எழுப்பினர்.

அப்போது ஹனூர் மஜத எம்எல்ஏ மஞ்சுநாதா, மைசூரு மண்டல ஐஜி போரலிங்கையா ஆகியோர் உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி செல்போன் வாயிலாக அவர்களிடம் பேசினார். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதி வாங்கி தருவதாகவும், வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதையடுத்து, ஐஜி போர லிங்கையா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘உயிரிழந்த அந்தோணிசாமியின் மனைவி லூர்துமேரி அளித்த புகாரின்பேரில் வனத்துறையில் பணியாற்றும் ஷிவராஜ், சேகரையா, அனில்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி, முதல் கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

ஹனூர் மஜத எம்எல்ஏ மஞ்சுநாதா கூறுகையில், ''நான் பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்கிறேன். அரசிடம் பேசி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல் பெற்றுள்ளேன். என் சார்பாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்குகிறேன்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவையும் அரசே ஏற்க கோரியுள்ளேன். அரசு தரப்பில் இந்த கோரிக்கைகளை ஏற்பதாக கூறியுள்ளார்கள். அதேபோல சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்''என்றார்.

போராட்டம் வாபஸ்: ஹனூர் மஜத எம்எல்ஏ மஞ்சுநாதா, ஐஜி போரலிங்கையா, விவசாயசங்கத்தினர், கிறிஸ்துவ அருட்தந்தையர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை போராட்டக்காரர்கள் ஏற்பதாக தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்தோரின் குடும்பத்தினர் பிரேத பரிசோதனைக்கும், உடல்களை பெற்றுக்கொள்ளவும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து ஹனூர், கொள்ளேகால் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 நாட்களாக நடந்துவந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் விஜய் கண்டனம்: கர்நாடக வனத் துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தமிழக முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது: கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுகாவில் உள்ள கிராமங்

களில் வசித்து வந்த 3 தமிழர்கள் கர்நாடகவனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சம்பவம் தொடர்பாக கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்நிலை விசாரணைக் குழு அமைத்து, தவறு இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கர்நாடக மாநிலம் ஹனூரில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.</p></div>
“தமிழக அமைச்சர்கள் டெண்டர் ஊழலை தொடங்கிவிட்டார்கள்; ஆடியோ ஆதாரம் இருக்கிறது” - அண்ணாமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in