

சென்னை: அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தில் இதுவரை 84 மாணவர்களுக்கு ரூ.30.24 கோடி நிதி விடுவிக்கப் பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அம்பேத்கர் அயலக உயர் கல்வி திட்டத்தில் 164 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 65 பேருக்கு மட்டும் உதவித் தொகை விடுவிக்கப்பட்டுள்ள தாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சமூக நீதித் துறை வெளியிட்ட அறிக்கை: அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் 2026-27-ம் கல்வி ஆண்டில் மொத்தம் 366 மாணவர் களுக்கு உதவித் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் இதுவரை 165 பேர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். மற்ற 201 பேர் 2027 மார்ச் மாதத்துக்குள் சேர உள்ளனர். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் சேர்ந்த 165 பேரில் 140 பேர் இணையதளத்தில் விண்ணப்பித்தனர்.
அதில் 84 பேருக்கு கல்விக் கட்டணம், இதர செலவுகளுக்காக ரூ.30.24 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 56 பேரிடம் பல்கலைக்கழக வங்கிக் கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளன. மற்ற 25 பேர் விரைவில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடு புறப்படும் முன்பு விசா, விமான கட்டணம், கல்வி கட்டண முன்பணம் போன்ற தொடக்கச் செலவுகளை சமாளிக்க, நடப்பு ஆண்டில் 116 மாணவர்களுக்கு தாட்கோ மூலம் ரூ.9.50 கோடி சிறப்புக் கல்விக் கடன் வழங்கப்பட்டுள் ளது. இத்தொகை மாணவர் களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையில் இருந்து தாட்கோவுக்கு ஈடுசெய்யப்படும்.
இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் நேரடியாக பல்கலைக் கழக கணக்குக்கும், மொத்த உச்சவரம்பான ரூ.36 லட்சத்துக்கு உட்பட்டு விமானக் கட்டணம், விடுதி உள்ளிட்ட செலவுகள் மாணவரின் வங்கிக் கணக்குக்கும் விடுவிக்கப்படுகிறது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் பிரத்யேக இணையதளம், மின்னஞ்சல் மூலம் இப்பணிகள் துரிதமாக செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு உதவித் தொகை விடுவிப்பில் எந்த தாமதமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.