

ஷாருக் ஈஸ்வரன்
சென்னை: புழல் அருகே பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் கயிறு அறுந்து ராட்சத குழாய் கீழே விழுந்த விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.
புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகர் பகுதி முழுவதும் சென்னை மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
24-வது தெருவில் ராட்சத கழிவுநீர் தொட்டி புதைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் மாலை ஒப்பந்த முறையில் இயக்கப்பட்ட கிரேன் இயந்திரம் மூலம், ராட்சத குழாயை தூக்கி பள்ளத்தில் வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, பளுதாங்காமல் கயிறு அறுந்ததில் குழாய் கீழே விழுந்தது. அந்த நேரத்தில், கண்ணப்பசாமி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது 3 வயது மகன் ஷாருக் ஈஸ்வரனுடன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, ராட்சத குழாய் விழுந்ததில் இருவரும் காயமடைந்தனர். வலியால் துடித்த சிறுவனை உடனே மீட்டு, உடனடியாக அருக உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு முதலுதவி அளித்த பிறகு, மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, மருத்துவமனை முன்பு சிறுவனின் உறவினர்கள் கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் நேற்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தான். பிரேதப் பரிசோதனைக்காக உடல், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கிரேனை இயக்கிய ஓட்டுநர், உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.