

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பேரூராட்சியில் தனியார் நிறுவன மனைகளுக்கு அங்கீகாரம் அளித்ததில் அரசுக்கு ரூ.1.20 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பேரூராட்சித் தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான பி.சி. ராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
களக்காடு பேரூராட்சி தலைவராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016 வரை பி.சி.ராஜன் இருந்தார். அப்போது இவரும் செயல் அலுவலராக இருந்த முத்துக்குமாரும் சேர்ந்து, அப்பகுதியில் தனியாருக்கு 74 ஏக்கரில் மனைகள் அங்கீகாரம் (பிளாட் அப்ரூவல்) செய்ததில், ரூ.1.20 கோடியை அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸார்வழக்கு பதிந்து திருநெல்வேலி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, பிளாட் அப்ரூவல் கொடுத்த அப்போதைய பேரூராட்சித் தலைவர் பி.சி.ராஜன், முத்துக்குமாருக்கு, தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், இருவருக்கும் தலா ரூ.31 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பி.சி.ராஜன் தற்போது களக்காடு நகராட்சி துணைத் தலைவராகவும், களக்காடு திமுக ஒன்றியச் செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார்.