

சென்னை: மத்திய அரசிடம் நிதியுதவி கோரி தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், ஜெகதீஸ்வரி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். மத்திய அமைச்சர்களை சந்தித்து நிதிபெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவாலை, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேற்று சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் முக்கிய கடல்சார் கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவிக்கான கோரிக்கை மனுவை அவர் அளித்தார். அப்போதுதுறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் அன்பழகன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: ராமேசுவரம்-தலைமன்னார் (இலங்கை) பன்னாட்டு பயணிகள் படகு போக்குவரத்துத் திட்டத்தை தொடங்க ரூ.118 கோடி வழங்க வேண்டும்.
கடலூர் பசுமைவள ஆழ்கடல் துறைமுக மேம்பாடு திட்டத்துக்கு ரூ.4,700 கோடியும் பக்கிங்காம் கால்வாய் புனரமைத்தல் மற்றும் ஆழப்படுத்துதல் பணிகளுக்கு ரூ.2,700 கோடியும் ஒதுக்க வேண்டும். கடல் நடைபாதைகள் சென்னை மெரீனா, மகாபலிபுரத்தில் கடல் நடைபாதைகள் அமைப்பதுடன், சென்னை-புதுச்சேரி பயணிகள் படகு போக்குவரத்து தொடங்குவதற்கு ரூ.900 கோடியும், மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியை இணைக்கும் பாம்பன் கால்வாயை 10 மீட்டருக்கு ஆழப்படுத்தும் பணிகளுக்கு ரூ.1,200 கோடியும் வழங்க வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான விரிவான கோரிக்கை ஆவணத்தை வழங்கினார். அப்போது, சென்னைக்குள் நுழையும் முக்கிய சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொண்டு, தேவையான முன்னெடுப்புகளைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், தமிழகத்தின் பொருளாதார வழித்தடங்களை வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசின் திட்டங்கள் மிகவும் அவசியம். எனவே, தமிழகத்தின் சாலை மேம்பாட்டுக்கான கோரிக்கைகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கி, திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டுக் கொண்டார்.
இதேபோல், மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, அமைச்சர் ராஜ்மோகன் சந்தித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் நிலுவையை நிதியை விரைவாக வழங்குமாறு வலியுறுத்தினார். அதேபோல், அமைச்சர் ஜெகதீஸ்வரியும் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
இதுதவிர மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் டெல்லியில் இன்று சந்தித்துப் பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.