

சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கல்லூரி மாணவி, சினிமா மேக்கப் ஆர்ட்டிஸ்ட் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை அருகே சிலர் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸார் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை பிடித்து போலீஸார் சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பிடிபட்டவர்கள் மண்ணடியை சேர்ந்த முகமது அசாருதீன் (30), திருவொற்றியூரை சேர்ந்த பாத்திமா என்ற சாரா (24), நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அஸ்மா நசிரீன் (20) என்பது தெரியவந்தது. முகமது அசாருதீன் பேஷன் டிசைனராக வேலை பார்த்து வருகிறார்.
சாரா சினிமாவில் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். அஸ்மா நசிரீன் அண்ணாநகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பப்களுக்கு செல்லும்போது மூவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்துள்ளனர்.
இவர்கள், சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் இளைஞர்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள், பப்களில் நடைபெறும் விருந்துகளில் பங்கேற்பவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்துள்ளனர். மேலும், கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள நண்பர்கள் மூலம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தப்பட்டது.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு போலீஸார் கூறினர்.
இந்நிலையில் இந்த மூவருடன் தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் இவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்தவர்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.