

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 புதிய திட்டங்களை செயல்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பேசின் பாலம் மற்றும் கூவம் ஆற்றுப் பாலத்தை விரிவுபடுத்தவும், வியாசர்பாடியில் உள்ள மேம்பாலக் கட்டமைப்பை நீட்டிக்கவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
கிராண்ட் நார்தர்ன் டிரங்க் சாலையில் உள்ள பேசின் பாலத்தை விரிவுபடுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நெடுஞ்சாலைத் துறை ரூ.19.10 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இந்தப் பாலம் பக்கிங்ஹாம் கால்வாய், பேசின் பாலம் ரயில் நிலையம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய் ஆகியவற்றைக் கடந்து செல்கிறது.
தற்போது பாலத்தின் சாலைப் பகுதி 6 மீட்டர் அகலத்தில் மட்டுமே உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இந்தப் பாதை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்வி நிறுவனங்கள், ரயில் நிலையங்கள், சரக்கு ரயில் முனையங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு தொழிற்சாலைகளுக்குச் செல்ல முக்கிய வழித்தடமாக உள்ளது.
இதனால், பாலத்தை விரிவுபடுத்துவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், கட்டுமான வடிவமைப்பு, போக்குவரத்துத் தேவை, நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் திட்டச் செலவு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
வியாசர்பாடியில் கிராண்ட் நார்தர்ன் டிரங்க் சாலையில் அமைந்துள்ள கிரேடு செப்பரேட்டரை நீட்டிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
இதேபோல், சென்னையில் கோயம்பேடு–திருமங்கலம் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை அகலப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
இந்த திட்ட அறிக்கை பணிக்கான ஒப்பந்த மதிப்பு ரூ.14.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய போக்குவரத்துப் பாதையான உள்வட்டச் சாலையில், ஜவஹர்லால் நேரு சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே இந்தப் பாலம் அமைந்துள்ளது.
கோயம்பேடு–அண்ணா நகர் மேற்கு சந்திப்பு அருகே, வி.ஆர்.மால் பகுதியில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இப்பாலம் உள்ளது. தற்போது இந்தப் பாலத்தின் வாகனப் போக்குவரத்துக்கான அகலம் 18.8 மீட்டராக உள்ளது.
இதனை 33.8 மீட்டராக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகப் பாலத்தின் இருபுறங்களிலும் தலா 7.5 மீட்டர் அகலப்படுத்தவும், 131 மீட்டர் நீளமுள்ள பாலத்தின் 8 பகுதிகளிலும் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.