

சென்னை: மோசடி வழக்கில் கைதான தேவநாதன் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் வரும் அக்.31-க்குள் சிறையில் சரணடைய உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இயங்கிய மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநர் தேவநாதன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கக் கோரி தேவநாதன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அவருக்கு 8 வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த அவகாசத்தை மேலும் நீட்டிக்கக் கோரி தேவநாதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுந்தர் மோகன், ஜி.கே.முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது, அப்போது பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி, அறுவை சிகிச்சையைக் காரணம் காட்டி தேவநாதன் தனியார் மருத்துவமனையிலேயே இருக்கும் நோக்கில் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரியுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஏற்கெனவே 8 வார காலம் அவகாசம் வழங்கப்பட்டு விட்டது என்றார். பதிலுக்கு தேவநாதன் தரப்பில், மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக இந்த கூடுதல் அவகாசம் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதையேற்க மறுத்த நீதிபதிகள், உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சையைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே உயர் நீதிமன்றம் 8 வார காலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள அனுமதித்துள்ளது.
எனவே அவகாசத்தை மேலும் நீட்டிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து வரும் அக்.31-ம் தேதிக்குள் தேவநாதன் புழல் சிறையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அன்றைய தினம், அரசின் மருத்துவக்குழு அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.