

மதுரை: தவெக அமைச்சரவையின் முதல் பட்டியலில் தென்மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக 3 அமைச்சர்கள், தற்காலிக துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதல் தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் தவெக தனித்து களமிறங்கியது. திமுக, அதிமுக கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், தவெக கட்சி தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு, பெரம்பூர் உள்ளிட்ட 108 தொகுதிகளில் தவெக வெற்றி கண்டது.
ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் 120 எண்ணிக்கையை பெற்று தமிழக முதல்வராக விஜய் இன்று பதவி ஏற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வருடன் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் உட்பட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். விஜய்யின் முதல் அமைச்சரவை பட்டியலில் தென்மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற நிர்மல்குமார், காரைக்குடி தொகுதியில் சீமானை தோல்வி அடைய செய்த மருத்துவர் டி.கே. பிரபு, சிவகாசியில் வென்ற கீர்த்தனா ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்ற கருப்பையாவுக்கு தற்காலிக சபாநாயகர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், “தென்மாவட்டங்களிலுள்ள 51 சட்டப்பேரவை தொகுதிகளில் 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பல்வேறு தொகுதிகளில் இரண்டாமிடத்திலும் வந்துள்ளோம். தென் மண்டலத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இணையாக வென்றுள்ளதால் தென் மண்டலத்திற்கு எங்களது அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு முதல் பட்டியலிலேயே 3 அமைச்சர்கள் மற்றும் தற்காலிக சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை விரிவாக்கத்திலும் தென்மாவட்டத்தில் மேலும், ஓரிருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்புகிறோம். மதுரை மத்தி, கிழக்கு தொகுதியில் இரு திமுக அமைச்சர்களை தோற்கடித்தவர்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளது ’ என்றனர்.