

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் நாமக்கல் நல்லசிவம், புதுக்கோட்டை சுப்பிரமணியன், செங்கல்பட்டு சாதனா ஆகியோருக்கு ‘நம்மாழ்வார்’ விருதுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று வழங்கினார்.
சென்னை: உயிர்ம வேளாண்மையில் சிறப்பாகச் செயல்படும் 3 விவசாயிகளுக்கு 2025-26-ம் ஆண்டுக்கான ‘நம்மாழ்வார்’ விருதுகளை முதல்வர் விஜய் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உயிர்ம வேளாண்மையில் (Organic Farming) ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், இத்துறையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையிலும், சிறந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் அவரது பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் 2025-26-ம் ஆண்டில் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் நாமக்கல் செ.நல்லசிவம், புதுக்கோட்டை அ.சுப்பிரமணியன், செங்கல்பட்டு சாதனா ஆகிய 3 விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு, பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வார் விருதுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று வழங்கினார். அமைச்சர் வினோத், தலைமைச் செயலர் சாய்குமார். வேளாண் துறைச் செயலர் பொ.சங்கர், இயக்குநர் க.வீ.முரளீதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நம்மாழ்வார் விருதாளர் செ.நல்லசிவம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை இடுபொருட்களைக் கொண்டு சோளம், கரும்பு, மா, தென்னை, காய்கறிகளை உற்பத்தி செய்தும், இயற்கை வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தும் வருகிறார். 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.
அ.சுப்பிரமணியன் கடந்த 10 ஆண்டுகளாக உயிர்ம வேளாண்மை முறையில் நெல் வகைகள், நிலக்கடலை, குறுமிளகு, தென்னை, வால்நட் போன்றவற்றை சாகுபடி செய்ததுடன், மதிப்பு கூட்டி விற்பனையும் செய்து வருகிறார். மதிப்பு கூட்டுதல் குறித்து 675 விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
சாதனா கடந்த 11 ஆண்டுகளாக உயிர்ம வேளாண்மை முறையில் கம்பு, கேழ்வரகு, உளுந்து, நிலக்கடலை, பச்சைப்பயிறு, வாழை, தென்னை, மா, பலா, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருவதுடன், சிறுதானியம், எண்ணெய் வகைகள் போன்றவற்றை மதிப்பு கூட்டியும் விற்பனை செய்து வருகிறார். 470-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.