

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் நிறைவடைந்த நிலையில், பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்யக்கோரி இதுவரை 34.75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் உயிரிழந்த வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிச.19-ம் தேதி வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் கடந்த அக்.27-ம் தேதி நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிச.19 முதல் ஜன.30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. இதில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும் நீக்கம் செய்யக் கோரி 1.84 லட்சம் பேரும் திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.
இதே காலகட்டத்தில் இணையவழியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5.74 லட்சம், நீக்கல் கோரி 15,935, திருத்தம் கோரி 4.38 லட்சம் என 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75,717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியாக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் முடிவடைந்தாலும், 18 வயது பூர்த்தியானவர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் கோரியும் விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. ஆனால் சட்டப்பேரவை தேர்தலின்போது துணைப் பட்டியலில் சேர்க்கப்படும். எனவே, இத்தேர்தலில் அவர்கள் வாக்களிக்க முடியும் என தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.