

சென்னை: சென்னை ஐ.சி.எப். ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஏப்.19-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த 2-வது ஏசி மின்சார ரயில் சேவை, சென்ட்ரல் - அரக்கோணம் இடையே நாளை (அக்.23) முதல் தொடங்குகிறது.
12 பெட்டிகளைக் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில் அக்.23-ம் தேதி முதல் டிச.24-ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர) இயக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு, திருவள்ளூர் நிலையத்தை இரவு 7.20 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு அரக்கோணம் சந்திப்பை சென்றடைகிறது.
அரக்கோணத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் நிலையத்தை காலை 8.30 மணிக்கும், சென்ட்ரல் நிலையத்தை காலை 9.30 மணிக்கும் வந்தடையும்.
இந்த ரயில் திருவாலங்காடு, கடம்பத்தூர், திருவள்ளூர், திருநின்றவூர், வில்லிவாக்கம், பெரம்பூர், பேசின்பிரிட்ஜ் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
முன்னதாக, இந்த ரயில் ஆவடியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, காலை 7.45 மணிக்கு அரக்கோணத்தை சென்றடையும்.
மற்றொரு சேவை, சென்ட்ரலில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, ஆவடி நிலையத்தை காலை 10.25 மணிக்கு அடையும். ஆவடியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.