

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு குழு அமைக்கப்பட்டு 3 வாரங்கள் ஆகியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தைக்கான தேதியை அறிவிக்காததால் போக்குவரத்து ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதையடுத்து, தொழிற்சங்கங்களை போக்குவரத்து அமைச்சர் அழைத்துப் பேசியதன் அடிப்படையில் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. இதையடுத்து, ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், பேச்சு வார்த்தைக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. இது போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜனிடம் கேட்டபோது, ‘‘போராட்டம் நடந்தபோது, தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை சில போக்குவரத்து நிர்வாகங்கள் ரத்து செய்யவில்லை. இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பும் வலியுறுத்தினோம். ஆனாலும் உறுதியளித்துள்ளதைப்போல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக போராட்டத்தின்போது விடுப்பு எடுத்தவர்களின் மீது நடவடிக்கை தொடருகிறது. மேலும், தமிழக அரசு குழு அமைத்து 3 வாரங்கள் ஆகின்றன.
ஆனால், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தேதியை அறிவிக்கவில்லை. இன்னும் சம்பந்தப்பட்ட குழுவினரே ஒன்று கூடி ஆலோசனை நடத்தாமல் இருப்பது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.