தவறான தகவலால் மருத்துவக் கடன் மறுப்பு: பாதிக்கப்பட்ட டெய்லருக்கு ரூ.53 ஆயிரம் இழப்பீடு வழங்க பாங்க் ஆப் இந்தியாவுக்கு உத்தரவு

தவறான தகவலால் மருத்துவக் கடன் மறுப்பு: பாதிக்கப்பட்ட டெய்லருக்கு ரூ.53 ஆயிரம் இழப்பீடு வழங்க பாங்க் ஆப் இந்தியாவுக்கு உத்தரவு
Updated on
1 min read

சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீத். டெய்லர். சென்னை (தெற்கு) நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இவர் தொடர்ந்த வழக்கில் கூறியிருந்ததாவது:

கடந்த 2007-ம் ஆண்டு நவம்பரில் என் நாக்கில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற சிட்டி பைனான்ஸ் வங்கியிடம் ரூ.1 லட்சம் கடன் கேட்டேன். அவர்கள் கடன் கொடுக்கும் முன்பு கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ (சிபில்) நிறுவனம் மூலம் என்னைப் பற்றி விசாரித்துள்ளனர். நான் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏற்கெனவே வாங்கியிருந்த ரூ.1 லட்சம் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்ற தவறான தகவலை அந்த நிறுவனம் சிட்டி பைனான்ஸுக்கு வழங்கியுள்ளது.

இதனால் மருத்துவச் செலவுக்கான ரூ.1 லட்சம் கடன் கிடைக்காமல் போய்விட்டது. தெரிந்தவர்களிடம் 36 சதவீத வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

பாங்க் ஆப் இந்தியாவில் நான் வாங்கிய ரூ.1 லட்சம் கடனுக்கு முறை யாக தவணைத் தொகை செலுத்திவந்த நிலையில் ‘சிபில்’ நிறுவனம் அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுசம்பந்தமாக விசாரித்தேன். நான் ஒழுங்காக தவணை செலுத்துவது பற்றி பாங்க் ஆப் இந்தியா நிறுவனம் முறையாக இணையதளத்தில் பதிவு செய்யாமல் இருந்துள்ளது. நான் பாக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டதற்கு இதுவே காரணம். அதனாலேயே எனக்கு கடன் கிடைக்காமல் போனது. மன உளைச்சலும் ஏற்பட்டது. எனவே, பாங்க் ஆஃப் இந்தியா எனக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும்.

இவ்வாறு ஷாகுல் ஹமீத் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சென்னை (தெற்கு) நுகர்வோர் குறைதீர்வு ஆணையத் தலைவர் ஜெயபாலன், உறுப்பினர்கள் தீனதாயளன், அமலா விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

ரூ.1 லட்சம் கடனுக்கான மாதாந்திர தவணையை ஷாகுல் ஹமீத் திருப்பிச் செலுத்தியது தொடர்பாக, பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம் இணையதளத்தில் முறையாக பதிவு செய்யவில்லை என்பது ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது. பாங்க் ஆப் இந்தியாவின் சேவைக் குறைபாடு காரணமாகவே அவர் மருத்துவக் கடன் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, மனுதாரர் ஷாகுல் ஹமீதுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரத்தை பாங்க் ஆப் இந்தியா வழங்கவேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in