

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் இதில் போட்டியிடுவது குறித்து தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியான திமுக ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த மக்களவை தேர்தலில், போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய திமுக, தற்போது உட்கட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில், தமிழக மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள ரங்கம் இடைத்தேர்தலில் போட்டி யிட அக்கட்சியின் தலைமை விரும் புகிறது. எனவே இந்த தேர்தலில் தங்கள் வேட்பாளரை திமுக களம் இறக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பாஜகவின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்பே ஸ்ரீரங்கத்தில் பாஜக போட்டியிட விரும்புவதாக கூறியிருந்தார். ரங்கம் இந்துக் களின் புனிதத் தலம் என்பதாலும், அமித் ஷாவின் தமிழக வருகை, பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை போன்றவற்றின் எதிரொலியை அறிந்து கொள்ளவும் இந்த தேர்தலில் போட்டியிட பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் காங்கிரஸ் போட்டி யிடுவது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, “இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதா வேண் டாமா என்பது தொடர்பாக நாளை (இன்று) காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேச வுள்ளேன். இந்த முடிவு டெல்லி மேலிடத்துக்கு தெரியப்படுத்தப் படும். இதைத்தொடர்ந்து டெல்லி தலைமையின் அறிவுரைப் படி முடிவை அறிவிப்போம்” என்றார்.
தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.