

ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பை ஐக்கிய நாடுகள் சபை சூட்டுகிறது.
இந்த ஆண்டு ‘மனித உரிமைகள் 365’ என்று தலைப்பு கொடுத்திருக்கிறது. ஐ.நா-வின் அகில உலக மனித உரிமை பிரகடனம் 1948-ல் அறிவிக்கப்பட்டு 1950-ல் அனைத்து நாடுகளும் அதை ஏற்றுக் கொண்டுவிட்டபோதும், இந்தியாவில் மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் 1993-ல் தான் இயற்றப்பட்டன.
ஆனாலும், இந்தியாவில் இன்னும் மனித உரிமை மீறல்கள் கட்டுக்குள் வந்த பாடில்லை. அரசாங்கம் செய்கின்ற தவறுகளையும் எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாமல் தனிமனிதர் ஒருவரால் சுட்டிக்காட்டக் கூடிய சூழல் இருந்தால் மட்டுமே அந்த நாடு, மனித உரிமையை மதிக்கின்ற நாடாக கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அப்படிப்பட்ட சூழல் இல்லை என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். மனித உரிமைகள் தொடர்பான செயல்பாடுகளில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சிறப்பாக செயல்படுவதாகச் சொல்லி இந்தியாவை உலக நாடுகள் ‘ஏ’ கிரேடில் வைத்திருக்கின்றன.
ஆனால், இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வரும் அறிக்கைகளோ முரண்பாடாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுத்த நாடுகளில் இந்தியாவுக்கு 138-வது இடம். ஆசியாவிலேயே இந்தியாவில்தான் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம்.
தனிமனித, இனக் குழுக்கள் மீதான தாக்குதல்களும் பாமரர்கள், ஏழைகள், பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களும் இந்தியாவில்தான் அதிகம் நடக்கின்றன. பத்திரிகை சுதந்திரத்தில் உலக அரங்கில் இந்தியா 140-வது இடத்தில் இருக்கிறது. மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளில் 70 சதவீத அமைப்புகளை கடந்த ஒரு வருடத்தில் மத்திய அரசு முடக்கி இருக்கிறது என்பது அதிர்ச்சியான செய்தி.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 20 மாதங்களில் 38 கவுரவ கொலைகள் நடந்திருக்கின்றன. அக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் 950 நடந்திருக்கின்றன. எனவே, மனித உரிமைகளுக்காக அனைத்து தளத்தில் இருப்பவர் களும் குரல்கொடுக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டி ருக்கிறது.
அதற்கு ஏற்ற அருமையான தலைப்பை இந்த ஆண்டு மனித உரிமை தினத்துக்காக கொடுத்திருக்கிறது ஐ.நா. மனித உரிமை என்பது அரசுக்கு எதிரான விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்காமல் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மனித உரிமைக்கான பாடத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
ஆண்டுதோறும் மனித உரிமை தினத்தை கொண்டாட வேண்டும். பொதுசேவை இயக்கங்கள், மாணவர்கள், மத்திய - மாநில அரசுகள் அத்தனை பேருமே மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஓராண்டுக்கு மேற்கொள்ள வேண்டும். மனிதத்தின் மாண்பை காக்க வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் விருப்பம்.