

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் மீது நேற்று கல்வீச்சு நடந்தது. ஆசிரமத்துக்கு சொந்தமான கடைகள் சூறையாடப்பட்டன.
சகோதரிகளின் தற்கொலை தகவல் பரவியதும் ஆசிரம நிர்வாகத்தைக் கண்டித்து நேற்று ஏராளமான அமைப்பினர் புதுச்சேரி யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரமம் அமைந்துள்ள பகுதியில் இன்ஸ்பெக்டர்கள் ஜிந்தா, செந்தில்குமார், எஸ்ஐ சஜித் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆசிரமத்துக்கு செல்லும் சாலை களில் தடுப்புகள் ஏற்படுத்தப் பட்டன. இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அதன் நிர்வாகிகள் வீரமோகன், இளங்கோ தலைமையில் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஆசிரம வளாகம் நோக்கி கற்களை வீசி தாக்கினர். இதில் கண்ணாடிகள் நொறுங்கின.
தள்ளுமுள்ளு
போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆசிரம வாசல் மூடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீ ஸார் கைது செய்தனர். இதற் கிடையே, மற்றொரு புறத்தில் தமிழர் களம் அமைப்பினர் நிர்வாகி அழகர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரமத்தில் நுழைய முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்தனர். இரு தரப்பையும் சேர்ந்து 44 பேரை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர் சம்பவங்களால், அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனத்துக் காக பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. கல்வீச்சு சம்பவத்தில் ஆசிரமத்திலிருந்த கண்ணாடிகள், விளக் குகள், கண்காணிப்பு கேமரா ஆகியவை சேதமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பின்புறம் ஆம்பூர் சாலையில் அமைந்துள்ள அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. அதில், பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடிகள் நொறுங்கின. பெட்ரோல் போட வந்த மரக்காணம் ஜெயராமன் தலையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், ரோமண்ட் ரோலண்ட் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான ஹானஸ்டி சொசைட்டி என்ற டிபார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் அதே வீதியில் உள்ள தங்கும் விடுதி ஆகியவையும் தாக்கப்பட்டன.
வன்முறையில் ஈடுபட்ட 44 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.