கூட்டணி பலத்தால் திமுக, அதிமுகவை வீழ்த்துவோம்: பாஜக மாநில பொதுச்செயலர் வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

கூட்டணி பலத்தால் திமுக, அதிமுகவை வீழ்த்துவோம்: பாஜக மாநில பொதுச்செயலர் வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி
Updated on
1 min read

நாடாளுமன்ற வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் ராமநாதபுரத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக மாநில பொதுச்செயலர் வானதி ஸ்ரீனிவாசன் தொலைபேசி வாயிலாக ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

நரேந்திர மோடியின் 2 நாள் பிரச்சாரம் தமிழகத்தில் பாஜகவுக்கு எந்த அளவுக்குக் கைகொடுக்கும்?

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து அவர் பேசி வருகிறார். நெசவு, சுற்றுலா, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, நதிகள் இணைப்பு போன்றவை பற்றி அவர் பேசியது தமிழக மக்களின் கவனத்தை ஒருங்கிணைத்துள்ளது.

அரசியல் களம் சூடுபிடித்துள்ள இந்நேரத்தில் நடிகர்களை (ரஜினி, விஜய்) மோடி சந்திப்பது ஏன்?

இது வழக்கமான ஒன்றுதான். நடிகர்களும் வாக்காளர்கள்தானே. சமுதாயத்தின் அனைத்து பிரிவின ருடைய ஆதரவையும் நாங்கள் கோருகிறோம். நடிகர்களைச் சந்திப்பதை பற்றி மட்டுமே பேசுகிறீர்கள். சாகித்ய அகாதமி விருதுபெற்ற ஜோ டி குரூஸ் கூடத்தான் மோடிக்கு ஆதரவளித்துள்ளார்.

ஆனாலும் பெரும்பாலான எழுத் தாளர்கள், ஊடகவியலாளர்கள் மோடிக்கு எதிரான நிலைப்பாட் டில்தானே இருக்கிறார்கள்?

உண்மைதான். ஜோடி குரூஸ் மட்டுமன்றி நாஞ்சில் நாடன், ஜெயமோகன் போன்ற முன்னணி தமிழ் எழுத்தாளர்கள் மோடிக்கு ஆதரவளித்துள்ளனர். வழக்கமாக தமிழ் இலக்கிய உலகம் என்பது இடதுசாரி மற்றும் திராவிட இயக்க சிந்தனையாளர்களால் நிரம்பியிருக்கும். ஆனால் அந்தச் சூழல் இப்போது மாறியிருக்கிறது.

அதிமுக பற்றிய பாஜக.வின் நிலைப்பாடு என்ன?

எங்களுடைய நிலைப்பாடுதான் கூட்டணியாக பிரதிபலித்துள்ளது. மத்தியில் அமைகிற ஆட்சிக்கு இந்தக் கூட்டணி எம்.பி.க்களை அனுப்பும். திமுக, அதிமுக இரண்டையும் விட்டுவிட்டுதான் இந்தக் கூட்டணியை உருவாக்கினோம்.

திமுக, அதிமுக போல் பூத் கமிட்டி அளவுக்கு பாஜகவால் வேலை செய்ய முடியுமா?

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டு காலமாக பாஜக அமைப்பு ரீதியாக வலுப்பெற்றிருக்கிறது. மேலும் எங்களுக்கு கிடைத்திருக்கும் கூட்டணி பலத்தால் திமுக, அதிமுகவுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு பூத் கமிட்டி வேலைகளை எங்களாலும் செய்ய முடியும். இதனால் அவர்களை வீழ்த்தவும் முடியும்.

காங்கிரஸ் போலவே பாஜகவிலும் கோஷ்டி பூசல் தலைதூக்குவது உண்மைதானா?

ஒருவருக்கு பிடிப்பது இன்னொருவருக்கு பிடிக்காமல் போகலாம். திமுக, அதிமுகவிலும் இது இருக்கிறது. பாஜக மாதிரியான ஜனநாயக அமைப்பில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனாலும் அவற்றை அமைப்பு ரீதியாக கட்டுக்குள் வைக்கும் பலம் எங்களுக்கு இருக்கிறது. இதற்காக எங்களை காங்கிரஸுடன் ஒப்பிடாதீர்கள். அவர்களிடம் நாங்கள் நெருங்கவே முடியாது.

உங்களுக்கு சீட் தராதது வருத்தம் அளிக்கவில்லையா?

நிச்சயமாக வருத்தம் ஏதும் இல்லை. தேர்தலில் நிற்பதாகட்டும், கட்சிக்காக உழைப்பதாகட்டும் இரண்டையுமே சமமாகத்தான் பார்க்கிறேன். தேர்தலில் இடம் கிடைக்கவில்லை என்றதும் எனது தேர்தல் பிரச்சார பயணத் திட்டத்தைக் கொடுத்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளில் இப்போது பிரச்சாரம் செய்து வருகிறேன். கட்சி என்னை அங்கீகாரம் செய்வதாகவே உணர்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in