

போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று மாலை நடத்தப பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தினர் தலைமைச் செயலகத்தில் இன்று காலை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில் சுமுக முடிவு ஏற்பட்டு, வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த 28-ம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் இதில் கலந்துகொண்டுள்ளன. முதல் நாளில் அரசு பஸ் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிமுக தொழிற்சங்கத்தினர் மற்றும் பணி நிரந்தரம் ஆகாத தொழிலாளர்களை வைத்து பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் குறைந்த அளவு அரசு பஸ்களே இயக்கப்பட்டதால் பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கடும் அவதிப்பட்டனர்.
பணிமனைகள் முன்பு திரண்டு பஸ்களை எடுக்க விடாமல் மறியல் செய்த தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். 3-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அரசுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், தொழிலாளர் களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரக அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில், தொழிலாளர் நலத்துறையின் தனித் துணை ஆணையர் யாஸ்மின் பேகம், நிர்வாகம் தரப்பில் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆல்பர்ட் தினகரன், தொழிற்சங்கங்கள் சார்பில் சண்முகம் (தொமுச), நடராஜன் (தொமுச), சவுந்தரரராஜன் எம்எல்ஏ ( சிஐடியு), லட்சுமணன் (ஏஐடியுசி) உட்பட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் 22க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுமார் இரண்டரை மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது. தங்கள் கோரிக்கைள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
அமைச்சருடன் இன்று பேச்சு
பேச்சுவார்த்தையின் முடிவில் நிருபர்களிடம் அண்ணா தொழிற்சங்க பொதுச்செயலாளர் சின்னசாமி எம்எல்ஏ கூறியதாவது:
ஊதிய உயர்வு பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது. தொமுச பேரவை தரப்பில் மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து பேசுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு தொழிற்சங்கத்தின் சார்பிலும் தலைவர், பொதுச்செயலாளர் என 2 பேர் மட்டுமே பங்கேற்பர்.
இவ்வாறு சின்னசாமி கூறினார்.
அமைச்சருடன் நடத்தும் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து தொழிற்சங்கங்கள் அறிவிக்கும் என தெரிகிறது.
தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டுள்ளன. முதல் நாளில் அரசு பஸ் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.