புதுச்சேரியில் பாஜக - தலித் அமைப்புகள் மோதல்: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு

புதுச்சேரியில் பாஜக - தலித் அமைப்புகள் மோதல்: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு
Updated on
1 min read

புதுச்சேரியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சட்டப்பேரவை அருகே உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது, பாஜக - தலித் அமைப்புகளிடையே மோதல் ஏற்பட்டது.

புதுச்சேரியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காலையில் இருந்தே சட்டப்பேரவை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்தனர். அருகே உள்ள தலைமை தபால் நிலையம் எதிரே, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கரை விமர்சித்து பேசியதாக சட்டப்பேரவை எதிரே திரண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, பீம்சேனா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் தலித் அமைப்பினர்களுக்கு தகவல் பரவியது. உடனே, ஆர்ப்பாட்ட இடத்துக்கு அவர்கள் சென்று தகராறில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. கல், செருப்புகளை வீசி தாக்கினர். உடனே, அங்கிருந்து இந்து முன்னணியினர் வெளியேறினர். போலீஸார் சென்று தாக்கு தலில் ஈடுபட்டவர்களை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தலித் அமைப்பினர் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த சூழ்நிலையில், பாஜக சார்பாக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சாமிநாதன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அந்த கட்சியினர் வந்தனர். இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலரும் அவர்களுடன் வந்தனர். உடனே, அம்பேத்கர் சிலைக்கு பாஜக, இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் மாலை அணிவிக்கக் கூடாது என்று தலித் அமைப்பினர் தடுத்தனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும், தடையை மீறி பாஜக-இந்து முன்னணியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். எஸ்பி ரவிக்குமார் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். மறியல் செய்ய முயன்ற பாஜகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். புதுச்சேரி சட்டப்பேரவை அருகிலேயே அடுத்தடுத்து இரண்டு முறை பாஜக மற்றும் தலித் அமைப்பினர் மோதிக் கொண்டதால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in