

பொதுவுடமை இயக்க முன்னோடி ம.சிங்காரவேலரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கும் படத்துக்கும் பாஜக-வினர் மாலை அணிவித்த விவகாரம் அரசியலாக்கப்பட்டி ருக்கிறது.
சிங்கார வேலரின் 155-வது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, சென்னையில் சிங்கார வேலர் மாளிகையில் உள்ள அவரது சிலைக்கும் அவரது படத்துக்கும் பாஜக மீனவர் அணி சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாஜக மீனவரணி மாநிலத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
கம்யூனிஸ்ட்களும் பாஜக-வும் எந்தக் காலத்திலும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று நிற்கும் நிலையில், பொதுவுடமை கட்சித் தலை வரான சிங்காரவேலருக்கு பாஜக-வினர் மரியாதை செலுத்தியதன் பின்னணியில் தேர்தல் அரசியல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சதீஷ்குமாரிடம் கேட்டதற்கு, “தேர்தலுக்காக சிங்காரவேலரை தேடிப் போக வில்லை. மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடந்த பத்து ஆண்டுகளாக மாலை அணிவித்து வருகிறேன்.
மீன்துறைக்கு தனி அமைச் சகம் அமைக்க வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்த பிறகு மீனவ மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்திருக்கிறது. அதில், மிரண்டுபோன கம்யூனிஸ்ட்காரர்கள், வாக்கு வங்கியை குறிவைத்து, சிங்கார வேலர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். இத்தனை நாட்களாக இல்லாமல் இப்போது மட்டும் என்ன திடீர் கரிசனம்?’’ என்று அவர் கூறினார்.