கடன்களை குறைத்து வருவாயை பெருக்குவது எப்படி? உள்ளாட்சிகளை ஆய்வு செய்ய 5-வது நிதி ஆணையம் அமைப்பு

கடன்களை குறைத்து வருவாயை பெருக்குவது எப்படி? உள்ளாட்சிகளை ஆய்வு செய்ய 5-வது நிதி ஆணையம் அமைப்பு
Updated on
1 min read

உள்ளாட்சி அமைப்புகளின் கடன்களை குறைத்து, மாநில அளவில் வருவாயைப் பெருக்குவது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க, ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி மற்றும் சொந்த வருவாயைக் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பல திட்டங்களை மத்திய, மாநில அரசின் நிதி அமைப்புகளிடம் கடன் பெற்று செயல்படுத்துகின்றன.

இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் கடன்களை குறைக்கவும், மாநில அளவில் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை அதிகரிக்கும் வகையிலான திட்டங்கள் குறித்தும் தமிழக அரசு ஆய்வு நடத்த உள்ளது. இதற்காக, ஆளுநர் ஒப்புதலின்படி 5-வது மாநில நிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் தலைவராக தமிழக அரசு திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், அலுவல் சாரா உறுப்பினராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பா.செங்குட்டுவன், உறுப்பினர்களாக நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் இயக்குநர்கள் 3 பேர் செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் செயலரும் நியமிக்கப்படுகிறார்.

இந்த ஆணையம் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு, மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அமைப்புகளின் நிதி நிலை குறித்து ஆய்வு செய்யும். மாநில அரசு விதிக்கத்தக்க வரிகள், தீர்வைகள், சுங்க வரி மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றின் வருவாய் மற்றும் அதன் பகிர்வு, உள்ளாட்சிகள் தாங்களே வைத்துக் கொள்ளக்கூடிய வருவாய், மத்திய, மாநில அரசின் மானியம், வருவாய் ஆதாரங்களை பெருக்கும் வாய்ப்புகள், செலவுகளை குறைப்பது குறித்த முடிவுகள், கடன்களை திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து நிதி வகைகளையும் ஆய்வு செய்யும்.

ஆய்வு அடிப்படையில், 2017-21 வரையான ஐந்தாண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி வருவாயைப் பெருக்குவது குறித்த பரிந்துரைகளை 2016-ம் ஆண்டு மே 31-ம் தேதிக்குள் அறிக்கையாக தமிழக அரசிடம் ஆணையம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in