திமுகவில் பதவி கிடைக்காதவர்களை பாஜகவுக்கு இழுக்க பேச்சுவார்த்தை தீவிரம்

திமுகவில் பதவி கிடைக்காதவர்களை பாஜகவுக்கு இழுக்க பேச்சுவார்த்தை தீவிரம்
Updated on
1 min read

திமுகவில் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை பாஜகவுக்கு இழுப்பதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

திமுகவின் 14-வது உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. எல்லா மட்டத்திலும் தேர்தல் முடிந்த நிலையில், மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் சென்னையில் நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தியும் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும் இதுவரை 56 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 41 மாவட்டங்களுக்கான செயலாளர்கள் பட்டியலை திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டது. மீதமுள்ள 15 மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது. சென்னையில் 4, சேலத்தில் 3, ஈரோட்டில் 2 என 9 மாவட்டங்களுக்கான தேர்தல் மட்டுமே நடத்தப்படாமல் உள்ளது.

திமுக தலைமை வெளியிட்ட பட்டியலில் மதுரை மாநகர் வடக்கில் வ.வேலுசாமி, மாநகர் தெற்கில் தளபதி, மதுரை வடக்கில் மூர்த்தி ஆகியோர் மாவட்டச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், கே.என்.நேரு கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் பழனிமாணிக்கம், பொங்கலூர் பழனிச்சாமி, என்.செல்வராஜ், நாகை மதிவாணன், கு.பிச்சாண்டி, சேலம் வீரபாண்டி ராஜா, ஈரோடு முத்துசாமி, கோவை கண்ணப்பன், தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன், ஜெயதுரை உள்ளிட்டவர்கள் அதிருப்தியில் இருப்பதாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுபோன்று, கட்சியில் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டவர்களை தங்கள் பக்கமாக இழுக்க பாஜக தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பாஜக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

சமீபத்தில் தமிழகம் வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அதிமுகவைவிட திமுக தற்போது வலுவிழந்துள்ளது. அதை மேலும் வலிமையற்றதாக ஆக்க வேண்டும் என்று கூறினார். ஊராட்சி முதல் மாவட்டம் வரை அமைப்பு ரீதியாக வலுவான கட்சியாக திமுக இருந்தாலும் தற்போதைய உட்கட்சித் தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் முதல் கிளைச்செயலாளராக இருந்தவர் வரை பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை பாஜகவுக்கு கொண்டுவரும் பொறுப்பு அந்தந்த கோட்டப் பொறுப்பாளர்களிடம் தரப்பட்டுள்ளது. நட்சத்திர அந்தஸ்து உள்ளவர்களிடம் தேசிய அளவிலான தலைவர்களே தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in