

எந்த நிலையிலும், திமுக, அதிமுகவுடன் வைகோ இணக்கம் காட்டக்கூடாது. திமுகவுடன் கைகோர்க்கும் யாரையும் ஏற்க மாட்டேன் என தமிழருவி மணியன் தெரிவித்தார்.
காந்திய மக்கள் இயக்கம் சார்பில் அரசமைப்பில் ஆசிரியர், மாணவர் பங்கு என்னும் தலைப்பில் ஈரோட்டில் நேற்று நடந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்த தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறியது:
என்னை பொருத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். அதிமுகவின் வீழ்ச்சி திமுகவின் எழுச்சியாக இருந்துவிடக்கூடாது என்பதில் இப்போது எச்சரிக்கையாக இருக்கிறேன்.
வைகோவை போர்க்குணம் மிக்க நல்ல தலைவராக இந்த நிமிடம் வரை பார்க்கிறேன். எந்த நிலையிலும், திமுக, அதிமுகவுடன் அவர் இணக்கம் காட்டக்கூடாது. திமுகவுடன் கைகோர்க்கும் யாரையும் ஏற்க மாட்டேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்படும்போது, ஈழ அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு, மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாப்பது, கச்சத் தீவை மீட்பது ஆகிய வாக்குறுதிகளை பாஜக வழங்கியது. ஆனால், இதுவரை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பாஜக கூட்டணியில் இருந்து பிற கட்சிகள் வெளியேற வேண்டும்
நடிகர்கள் விரிக்கும் மாயவலையில் இளைஞர்கள் விழக்கூடாது. எந்த திரைப்பட நடிகராலும் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. கருப்பு பணத்தில் திளைக்கும் நடிகர்களால் ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது. ரஜினி, விஜய் என யாராக இருந்தாலும் எனது கருத்து இது தான் என்றார்.
தமிழக காங்கிரஸில் இப்போது நடைபெறும் சம்பவங்களை உற்று பார்க்கும்போது தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸில் இருந்து வாசன் வெளியேறினால் நிச்சயம் அவரை ஆதரிப்பேன் என்றார்.