பழநி: பழநியில் பக்தர்கள் வசதிக்காக தனியாரிடம் ரூ.58.54 கோடிக்கு வாங்கப்படும் 23.78.5 ஹெக்டேர் நிலம் கோயில் பெயருக்கே மாற்றப்படும் என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த 23.78.5 ஹெக்டேர் தனியார் நிலம் கையகப்படுத்தவும், அந்த நிலத்துக்கு ரூ.58 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 724-ஐ இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக நிதியிலிருந்து இழப்பீடாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கோயிலுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க துணை மின் நிலையம், பக்தர்களுக்கான குளியலறை, கழிப்பறை, மருத்துவ வசதிகளுடன் கூடிய தங்குமிடம், விழாக் காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழநி பைபாஸ் சாலையிலிருந்து கிரி வீதி மற்றும் சுற்றுலா பேருந்து நிறுத்தம் வரை இணைப்புச் சாலை அமைக்கப்படும் என அறநிலையத்துறை முதன்மைச் செயலர் கடந்த 2022 டிச. 26-ல் உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை இந்து சமய அறநிலையத் துறை சட்டத்துக்கு புறம்பானது. கோயில் நிதியை குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே செலவிட அறநிலையத் துறை சட்டம் அனுமதிக்கிறது.
அதன்படி இந்த பணிகளை கோயில் நிதியில் மேற்கொள்ளக் கூடாது. இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. கோயில் தரப்பில், கோயில் நிதியானது கோயிலின் மேம்பாட்டுப் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
நிலம் கையகப்படுத்த தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. அத்தொகையை அரசுக்கு கோயில் நிர்வாகம் வழங்கும். நிலம் கோயில் பெயரில் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்டு மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.