

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், பொருளாளர் கோவை தங்கம் உள்ளிட்ட வர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜி.கே.வாசன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களும் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக வாசன் ஆதரவாளர்கள் கூறியதாவது:
காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து எங்களை அவமானப் படுத்தி வருகிறது. எனவே எங்கள் தலைவர் ஜி.கே.வாசனை தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுநாள்வரை யோசித்த வாசன், இப்போது அந்த முடிவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறியுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பொதுச் செயலாளர்களில் 10 பேரும், 20 மாவட்ட தலைவர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை ஜி.கே.வாசனிடம் கொடுத்துள்ளனர். மேலும் வாசன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் கட்சியிலிருந்து வெளியேறும் எண்ணத்தில் உள்ளனர்.
இதுகுறித்து ஓரிரு நாட்கள் பொறுத்து முடிவுகளை எடுக்கலாம் என்று வாசன் கூறியுள் ளார்.
மேலும் சனிக்கிழமை (இன்று) சென்னை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளையும், திங்கள், செவ்வாய் கிழமைகளில் மற்ற மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்கிறார். இதையடுத்து அவர் தனது முடிவை அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.