கண்மாய் நீரில் மூழ்கி சகோதரிகள் உட்பட 3 பேர் பலி

கண்மாய் நீரில் மூழ்கி சகோதரிகள் உட்பட 3 பேர் பலி
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள தாலிக்குளத்தைச் சேர்ந்த விவசாயி முனியாண்டி, சித்ராதேவியின் மகள் மாலதி (18) 11-ம் வகுப்பு படித்துள்ளார். இவரது சகோதரி நிவேதா (14). இவர் திருப்பாச்சேத்தி அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்தார். சித்ராதேவியின் சகோதரி பாண்டிச்செல்வியின் மகன் சதீஷ் (5) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்கள் அனைவரும், நேற்று காலை தாய் சித்ராதேவியுடன் வயலுக்குச் சென்றுவிட்டு மதிய நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வயல்வெளியில், வந்த வழியில் செல்லாமல் குறுக்கே செல்லும் மாரநாடு கண்மாயைக் கடந்து எதிரே உள்ள வீட்டுக்கு எளிதில் சென்றுவிடலாம் என எண்ணி கண்மாய்க்குள் இறங்கியுள்ளனர்.

அப்போது, சித்ராதேவி முன்னால் நடந்து சென்றுள்ளார். அவரது 2 மகள்களும், தங்கை மகனும் பின்னால் நடந்து வந்துள்ளனர்.

சிறிது தொலைவு நடந்து சென்ற சித்ராதேவி, பின்னால் வந்த பிள்ளைகளைக் காண வில்லை என திரும்பிப் பார்த்தபோது 3 பேரும் பள்ளத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர்.

சித்ராதேவி ஊருக்குள் சென்று சத்தம் போட்டு கிராம மக்களை வரவழைத்துள்ளார். இதையடுத்து அங்கு திரண்ட கிராம மக்கள், மூழ்கி இறந்த மாலதி, நிவேதாவின் உடல்களை மீட்டனர்.

மானாமதுரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் திருப்பாச் சேத்தி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு சிறுவன் சதீஷின் உடல் கிடைத்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in