அனைத்து காவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்; தவறினால் நடவடிக்கை: டிஜிபி திரிபாதியின் முதல் உத்தரவு

அனைத்து காவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்; தவறினால் நடவடிக்கை: டிஜிபி திரிபாதியின் முதல் உத்தரவு
Updated on
1 min read

அனைத்து காவலர்களுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி திரிபாதி தனது முதல் அறிவிப்பாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருசக்கர வாகன விபத்தில் அதிகம் உயிரிழப்போர் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களே. அதிலும் பின்பக்கம் அமர்ந்திருப்பவர்களே அதிகம் உயிரிழந்தனர் என ஆய்வு கூறுகிறது.

இதைக் கருத்தில்கொண்ட உயர் நீதிமன்றம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்திருப்பவர்கள் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து அதைக் கட்டாயம் கடைப்பிடிக்க உத்தரவிட்டது.

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதே போன்று போலீஸார் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கடந்த ஞாயிறு அன்று டிஜிபி திரிபாதி பதவியேற்றார். பதவி ஏற்றவுடன் முதல் உத்தரவை அனைத்து காவல் ஆணையர்கள், அனைத்து டிஐஜிக்கள், அனைத்து ஐஜிக்கள், அவர்கள் மூலமாக எஸ்பிக்களுக்கு ஒரு உத்தரவை அனுப்பியுள்ளார்.

அதில் உயர் நீதிமன்றம் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது. வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என்கிற உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவை மேற்கோள்காட்டி காவலர்கள் ஹெல்மெட் அணிவதையும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். சீருடையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாறுபட்ட நிலை எடுக்கக்கூடாது என்று திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in