

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பணப் பட்டுவாடாவைக் கண்காணிக்க வருமான வரித்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக பணப் பட்டுவாடா தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க தொடர்பு எண்ணை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்த நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்டது. வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வீடு மற்றும் திமுக பிரமுகர்களின் வீடுகளில் மார்ச் 29-ம் தேதி நள்ளிரவு தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் உறவினர் தாமோதரனுக்குச் சொந்தமான சிமெண்ட் கிடங்கில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் ரூ.9 கோடி அளவுக்கு இருந்தது தெரியவந்தது.
மேலும், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்கள் விவரங்களுடன், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய பணத்தை பிளாஸ்டிக் கவர்களில் தனித்தனியாக கட்டு கட்டி வைத்திருந்தனர். புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளை காட்பாடி காந்தி நகரில் உள்ள இந்தியன் வங்கியின் 'செஸ்ட் பிராஞ்ச்' என்ற கிளையில் இருந்துதான் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்தக் கிளையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறையினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் வேலூர் மக்களைவைத் தொகுதிக்கான செலவு கண்காணிப்பு குழுவின் அதிகாரி சிலுப்பன் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், இவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளதால், ஏறக்குறைய இடைத்தேர்தலைப் போன்ற ஒரு சூழல் மாவட்டத்தில் நிலவுகிறது. அதிமுக, திமுகவினர் தங்களின் பிரச்சார வியூகங்களையும் மாற்றி வருகின்றனர்.
எனவே இந்தத் தேர்தலில் பணப் பட்டுவாடா நடவடிக்கையைத் தடுக்க சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ள புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு பணப் பட்டுவாடா தொடர்பாக 1800425660 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மேலும், வேலூர் மக்களவைத் தொகுதியில் திடீர் சோதனைகள் நடத்தவும் 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் முகாமிட்டுள்ளனர். ஏற்கெனவே பணம் பதுக்கல் தொடர்பான புகாரில் சிக்கிய திமுக வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் நடவடிக்கைகளையும் அவர்களின் செல்போன் உரையாடல்களையும் வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.