

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநகரப் போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று மாலைக்குள் ஊதியம் வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் போக்குவரத்து ஊழியர்களுக்கான மாத வருமானம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆனால், இன்னும் ஜூன் மாதத்திற்கான ஊதியம் கிடைக்கப் பெறவில்லை என, சென்னை மாநகரப் போக்குவரத்தைச் சேர்ந்த பல பணிமனைகளில் பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் இன்று (திங்கள்கிழமை) காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் சிஐடியு, திமுகவின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, அண்ணா நகர் மேற்கு, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பல பணிமனைகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, பெரும்பாலானோர் ரயிலில் பயணித்ததால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
மேலும், பலரும் ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலானவர்கள் ஏற்றப்பட்டு பயணம் செய்ய வேண்டியிருந்தது.
இந்நிலையில் ஊழியர்களின் போராட்டம் குறித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ''ஊழியர்கள் அனைவரும் விரைந்து பணிக்குத் திரும்ப வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவர்கள் செயல்பட வேண்டும்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) விடுமுறை என்பதால் ஊழியர்களுக்கு நிதி வழங்க முடியவில்லை. இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் ஊதியம் அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
ஊதியக் குறைப்பு என்பது அரசு வேலைகளில் கிடையாது. பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்குச் சென்றுவிட்டனர். 4 பணிமனைகளில் மட்டுமே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் விரைவில் பணிக்குத் திரும்புவர்.
சம்பளம், நேற்று கொடுக்கமுடியாததால் 1-ம் தேதியான இன்று வழங்கப்படும். இதில் தவறெதுவுமில்லையே? ஊதியக் குறைப்பு என்பது வதந்தி. அவர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும்.
பேருந்து டீசல் விலை உயர்வு, சம்பள உயர்வு, உதிரி பாகங்கள் விலைஏற்றத்தால், பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது. டீசல் விலை தினந்தோறும் ஏறிக்கொண்டே இருக்கிறது. எந்த ஆட்சியாக இருந்தாலும் போக்குவரத்துத் துறையில் பற்றாக்குறை என்பது இருந்துகொண்டேதான் இருக்கும். இது சேவை மனப்பான்மையுடன் இயங்கும் கழகம். லாப நோக்கத்தில் நாங்கள் போக்குவரத்துத் துறையை இயக்கவில்லை.
சின்ன சின்ன சிரமங்கள் இருந்தாலும் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். முதல்வரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினேன். இன்று மாலைக்குள் ஊதியம் வழங்கப்படும்'' என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.