பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படுமெனில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை நிராகரிப்போம்: பேரவையில் ஓபிஎஸ் பேச்சு

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படுமெனில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை நிராகரிப்போம்: பேரவையில் ஓபிஎஸ் பேச்சு
Updated on
1 min read

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் 10 சதவீத இட ஒதுக்கீட்டை நிராகரிப்போம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து நேற்று (திங்கட்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில், முதல்வரிடம் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன என்று துணை முதல்வரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், ''அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளும் தங்களுடைய கருத்தைத் தெரிவித்துள்ளன. 69% இட ஒதுக்கீடு தற்போது தமிழகத்தில் அமலில் உள்ளது. அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி, முடிவெடுக்கப்படும்,.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பு இருக்காது எனில், இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வோம். பாதிப்பு ஏற்படும் என்றால் 10 சதவீத இட ஒதுக்கீட்டை நிராகரிக்கும் முடிவை எடுப்போம்'' என்று தெரிவித்தார் ஓபிஎஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in