Published : 24 Nov 2014 10:08 AM
Last Updated : 24 Nov 2014 10:08 AM

மது ஒழிப்புப் பிரச்சாரத்தில் கிராமக் குழந்தைகள்: பெண்கள் இணைப்புக் குழுவின் சத்தமில்லாத சேவை

மது ஒழிப்பின் அவசியத்தை எல்லா மட்டத்திலும் பேச ஆரம்பித்திருக்கும் தருணம் இது. இந்த நேரத்தில், அடுத்த தலைமுறையாவது மதுவை வெறுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவினர் மது ஒழிப்புப் பிரச்சாரத்தை கிராமக் குழந்தைகள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் பொன்னுத்தாய். கிராமக் குழந்தைகள் பஞ்சாயத்து பற்றி அவர் நம்மிடம் பேசினார்.. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர்தான் என் சொந்த ஊர். பக்கத்தில் உள்ள ஆத்துவழி கிராமத்தில்தான் கட்டிக் கொடுத்தார்கள். மாப்பிள்ளை போலீஸ் வேலை பார்க்கிறார் என்றதும் தீர விசாரிக்காமல் கல்யாணத்தை முடித்துவிட்டார்கள்.

எந்நேரமும் குடிக்கு அடிமையாகிக் கிடந்த அவரால் நான் பட்ட கஷ்டங்கள் நிறைய. கடந்த முப்பது ஆண்டுகளில் ஒரு மாதம்கூட அவரது சம்பளத்தை கையில் வாங்கியது இல்லை. முதல் பத்து வருடம் நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை. அதற்கு பிறகு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட பழகிக் கொண்டேன். அந்த தைரியத்தை எனக்குக் கொடுத்தது தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுதான். இந்தக் குழுவில் சாதாரண உறுப்பினராக சேர்ந்த நான், இப்போது மாநிலச் செயலாளராக இருக்கிறேன்.

இந்த சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கியக் காரணமே மதுதான். பெற்ற தகப்பனை நம்பி மகளை விட்டுவிட்டுச் செல்ல முடியவில்லை. பண்டிகை நாட்களில் இத்தனை கோடிக்கு மது வியாபாரம் நடந்ததாக அறிக்கை கொடுக்கும் அரசு, அதன் பின்னணியில் எத்தனை பெண்களின் கண்ணீர் இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. மதுவை ஒழித்தால் அரசுக்கு வருவாய் குறைந்துவிடும் என்கிறார்கள்.

இலவசங்களை நிறுத்தினாலே இந்த இழப்பை ஈடுசெய்ய முடியும். எனது கணவர் வேலை இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். இருப்பினும் அவருக்கு ஒரு மனைவியாக செய்ய வேண்டிய கடமையை செய்து கொண்டிருக்கிறேன். இன்னமும் அவரை குடியின் பிடியிலிருந்து என்னால் முழுமையாக மீட்க முடியவில்லை. குடிப்பவர்களை திருத்துவது கடினம் என்பதால், அடுத்த தலைமுறையை மதுவுக்கு எதிராக தயார்படுத்த ஆரம்பித்தோம். எங்களது அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் சுமார் 700 கிராமக் குழந்தைகள் பஞ்சாயத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இதில் உறுப்பினர்களாக உள்ள குழந்தைகள் மாதம் ஒருமுறை கூடிப் பேசுவர். வட்டார அளவில் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் மாநில அளவில் ஆண்டுக்கு ஒரு முறையும் கூடிப் பேசுவர். அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குகிறோம். தங்கள் கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பள்ளிக்கு செல்ல கூடுதல் பேருந்து, மணல் கொள்ளை போன்றவை குறித்து கிராமப் பஞ்சாயத்தில் கேள்வி எழுப்பவும் கலெக்டருக்கு மனு கொடுக்கவும் குழந்தைகளை தயார்படுத்தி இருக்கிறோம்.

மதுவால் விளையும் கொடுமைகள் அனைத்தும் இந்தக் குழந்தைகளுக்குத் தெரியும். தங்கள் கிராமங்களில் இவர்கள் மது ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, இயற்கை விவசாயம் உள்ளிட்டவை குறித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். கிராமப் பஞ்சாயத்தில் உறுப்பினர் களாக இருக்கும் குழந்தைகள் தங்கள் பிறந்த நாளுக்கு சாக்லேட் கொடுப்பதற்கு பதிலாக மரக் கன்றுகளை வாங்கி நடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

விவசாய வேலைகளில் பெரும் பகுதி பெண்கள்தான் பார்க்கிறார்கள். எங்களின் அடுத்த இலக்கு, பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை ஒருங்கிணைப் பது. அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.. நம்பிக்கையோடு சொன்னார் பொன்னுத்தாய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x