

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங் கலத்தில் 2 ஆண்டுகளாகவே கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்பட் டிருக்கும் என்று எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட வயலின் உரிமையாளர் ஸ்ரீராம் தெரிவித்தார்.
அண்மையில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டு எண்ணெய்ப் படலம் தேங்கிய வயலின் உரிமையாளர் கதிராமங்கலம் அக்ரஹாரத் தெருவைச் சேர்ந்த ஆர்.ஸ்ரீராம், ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
கடந்த 2002-ம் ஆண்டு என்னுடைய வீட்டுக்கு வருவாய்த் துறையை சேர்ந்த நிலமெடுப்பு அதிகாரிகள் வந்தனர். அப்போது உங்களுடைய நிலத்தின் வழியாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. அதற்காக உங்கள் நிலத்தை நாங்கள் எடுத்துக் கொண்டுவிட்டோம். நீங்கள் கையெழுத்து போடுங்கள். இந்த ஊரில் பலரும் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டார்கள். நீங்கள் கையெழுத்து போட வில்லை என்றாலும் நாங்கள் நிலத்தின் வழியாகத் தான் எடுத்துச் செல்வோம் என தெரிவித்ததால் நான் கையெழுத்து போட்டேன்.
கடந்த 2002-ம் ஆண்டு இதற்கான பணிகளைத் தொடங்கிய ஓஎன்ஜிசி நிறுவனம், 2004-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் கச்சா எண்ணெய் எடுத்து குழாய்கள் மூலம் குத்தாலத்துக்கு கொண்டு செல்கிறது.
கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய்க் குழாய் எங்கெங்கு பூமிக்கடியில் உள்ளது என்பதே யாருக்கும் தெரியாது. குழாய்கள் செல்லும் வழியில் எவ்வித குறியீடும் இல்லை. வீடுகள் கட்டுவதற்காகக் கூட பூமியைத் தோண்ட கூட முடியாத நிலை உள்ளது.
எனக்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. நான் கடந்த 2009-ல் இருந்து பாரம் பரிய நெல் சாகுபடி செய்து வருகிறேன். ஆண்டுதோறும் எனது வயலில் நெல் திருவிழா, இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி, அறுவடை திருவிழா ஆகியவற்றை நடத்தி வருகிறேன். நான் வயலுக்கு செல்வதற்காக அமைத்த சாலையைக் கூட ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் எடுத்துக் கொண்டனர்.
கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி காலை வயலுக்குச் சென்ற போதுதான் என் வயலில் கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது தெரிந்தது. வயலில் ஒரு இடத்தில் கச்சா எண்ணெய் பொங்கிப் பொங்கி வந்தது. ஏனெனில், கசிவு ஏற்பட்ட குழாய் அகற்றப்பட்ட போது நான் அங்கிருந்தேன். அந்த குழாயில் 2 இடங்களில் துளை இருந்தது.
இந்த வயலில் 2 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டிருக்க வேண்டும்.இதனால்தான் இந்த வயலில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக சரியான மகசூல் கிடைக்கவில்லை. கச்சா எண்ணெய் பாதிக்கப் பட்ட வயலில் உடனே வேறு மண் கொட்டி நிரப்பியிருக்க வேண்டும். அப்படி செய்யாததால் வயலில் தேங்கியிருந்த கச்சா எண்ணெய்யில் 90 சதவீதம் நிலத்தடியில் இறங்கிவிட்டது. இதற்காக ஓஎன்ஜிசி நிர்வாகம் ரூ.60 ஆயிரம் இழப்பீடு தரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாற்று ஏற்பாடு செய்யுமாறு ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் கேட்டால், இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். தற்போது பெய்துள்ள மழையால், வயலில் தேங்கியிருந்த எண்ணெய்ப் படலம் வாய்க்கால் வழியாக அடுத்த வயலுக்கும் சென்றுவிட்டது. இனி கசிவு ஏற்பட்டால் அதை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் என ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் கேட்டு வருகிறேன். அதற்கான திட்டம் அவர்களிடம் இருப்பது போல தெரியவில்லை என்றார்.